சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தவும், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கவும் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். முன்னதாக, கொல்கத்தா வந்தடைந்த ஜெ.பி. நட்டாவை, பாஜக எம்.எல்.ஏ மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வரவேற்றார். தொடர்ந்து, மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா கொல்கத்தாவில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தேசியத் தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டாவை வரவேற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் வலிமையான, வளமான மேற்கு வங்கத்தை உருவாக்குவதில் அவரது வழிகாட்டுதலும் தொலைநோக்குப் பார்வையும் எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜெ.பி.நட்டா பல மாவட்ட அளவிலான கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், பாஜக மருத்துவர் அணியின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பாஜக தொண்டர்களிடமிருந்து கள நிலவரம் குறித்த கருத்துக்களைப் பெற்று, வரவிருக்கும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. நாளை (ஜனவரி 9) ஜெ.பி. நட்டா தனது மத்திய அமைச்சகம் தொடர்பான அதிகாரப்பூர்வ கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று பேசப்படுகிறது.







