கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை தாக்கிய விவகாரத்தில்,
இளம்பெண்ணின் தந்தை, உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த கணபதி பகுதியைச் சேர்ந்த சினேகா, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவிக்னேஷ்வர் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இருவரும் கடந்த 1ம் தேதி திருமணம் செய்து கொண்டு சரவணம்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
தொடர்ந்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, கடந்த 3ம் தேதி காதல் தம்பதியை வீட்டிற்கு அழைத்த பெண்ணின் பெற்றோர், வீட்டில் வைத்து இருவரையும் தாக்கினர். தொடர்ந்து இருவரையும் காரில் ஏற்றி, கத்தியை காட்டி மிரட்டியதால் அச்சமடைந்த காதல் தம்பதி கூச்சலிட்டனர்.

அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதியை கடந்த போது, காரில் தம்பதியினரின் கூச்சல் சத்தம் கேட்ட பொது மக்கள் போலீசார் உதவியுடன் இருவரையும் மீட்டனர். தம்பதியினர் இருவரையும் சரவணம்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போலீசார், சினேகா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.







