KKRvsPBKS | பவுலர்களை பந்தாடிய பஞ்சாப் – கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா அணிக்கு எதிராக 202 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(ஏப்.26) கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.

கொல்கத்தா அணி பவுலர்களை பவர் பிளேவில் அலறவிட்ட பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பில் அடித்தனர். இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் பிரியான்ஷ் ஆர்யா-வை 69 ரன்களில் அவுட்டாக்கி அதிரடியான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இருப்பினும் ஒருபுறம் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார்.

6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் அடித்த பிரப்சிம்ரன் சிங் மொத்தமாக 83 ரன்கள் அடித்து வைபவ் அரோராவிடம் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியால் பஞ்சாப் அணி 14 ஓவரில்களிலேயே 160 ரன்களை எட்டியது. அதன் பின்பு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 25* ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 201 ரன்களை குவித்தது. இதையடுத்து 202 என்ற இலக்கை கொல்கத்தா அணி சேஸிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.