மீண்டும் மத்திய அமைச்சராகிறார் கிஷண் ரெட்டி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டிக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் வழஙகப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய…

கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டிக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் வழஙகப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் பதவி ஏற்க நரேந்திர மோடி  உரிமை கோரியதை அடுத்து அவர் இன்று பதவியேற்பை நடத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பிரதமர் இல்லத்தில் இன்று அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் எம்பி களுக்கு தேநீர் விருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய விருந்தில் கலந்து கொள்பவர்களில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் தேநீர் விருந்தில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, சர்பானந்த் சோனோவால், சிவ்ராஜ்சிங் சவுகான், அமித்ஷா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கிஷண் ரெட்டி இந்த முறையும் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேபினெட் செயலாளாரான ராஜிவ் கௌபா கிஷண் ரெட்டிக்கு மத்திய அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்து அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.