முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு; நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.  சென்னை வடக்கு மாவட்ட திமுக…

அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். 

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் ஊடகங்களை சந்தித்த குஷ்பு திமுகவை கடுமையாக சாடினார். பெண்களை அவதூறாக பேசுவதுதான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பினார்.

குஷ்புவின் ஆவேச பேச்சு வெளியான சிறிது நேரத்திலேயே திமுகவிலிருந்து சிவாஜி
கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த கொடுங்கையூர் போலீசார் பொது வெளியில் அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு, உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். ஆயினும் அவதூறாக பேசியவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் எனக் கூறிய அவர் தனது எதிர்ப்பு காரணமாகவே அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.