கேரளாவில் இன்று 11-வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, நடந்து செல்லும் வழியில் சிறுமி ஒருவரின் காலில் காலணி மாட்டிவிட்டது வைரலாகி வருகிறது.
ஜாதி, மதம்,பொருளாதாரம் சார்ந்து மக்கள் பிளவு பட்டு இருப்பதாகவும் இதனை ஒன்றிணைக்கும் வகையில் ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7-ம் தேதி ராகுல்காந்தி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, கடந்த 11-ம் தேதியில் இருந்து கேரளாவில் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் செல்லும் வழியில் பல தரப்பட்ட மக்களை சந்தித்து வரும் அவர், இன்று 11-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழா ஹரிபாட் பகுதியில் இருந்து ஒட்டப்பன பகுதியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நடைபயணத்தின் போது, வழியில் சிறுமி ஒருவரும் ராகுல்காந்தியுடன் நடந்து சென்றார். அப்போது சிறுமியின் காலணி அவரின் காலை விட்டு கழன்றுள்ளது. இதனைப் பார்த்த ராகுல் காந்தி ஹலோ பிரதர் ஒரு நிமிஷம் நில்லுங்கனு சொல்லிக்கொண்டு குழந்தையின் காலில் இருந்து கழன்ட காலணியை அவரே மாட்டி விட்டார்.
மேலும், வழியில் வந்த மூதாட்டி ஒருவர் ராகுல்காந்தியை கட்டியணைத்து தனது அன்பை பரிமாறினார். மேலும் குழந்தைகள் சிலரும் ராகுலுக்கு பூக்களை கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.







