தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே தான் உள்ளது என, இந்திய அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய பெருந்தகையாளர். தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலே மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பு மிக்க தலைவர் என்று பல சிறப்புகள் கொண்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 127 வது பிறந்த நாள் இன்று.
காயிதே மில்லத் என்று அழைக்கப்படும், முஹம்மது இஸ்மாயில, திருநெல்வேலி சீமையில், இஸ்லாமிய மார்க்க மவுலியாகவும், ஜவுளி தொழிலில் பெருவணிகராகவும், இருந்த மியாகான் ராவுத்தரின் மகனாக 1896 ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். இறை சிந்தனையும், நாட்டுப்பற்றும் ஒருங்கே கொண்டு வளர்ந்த இவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக பி.ஏ பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார்.
பிறகு முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து, முக்கிய தலைவரானார். இந்திய விடுதலைக்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த போது, தமிழுக்கு மட்டும் தான் தேசிய மொழியாகும் தகுதி உள்ளது என வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்தார். அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, முகமதலி ஜின்னா,சாஸ்திரி, தந்தை பெரியார், காமராஜர்,அண்ணா, இந்திரா காந்தி, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
1946, 1952 ம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலே மக்களின் மனங்களை வென்று ,மக்களவை சென்ற சிறப்புக்குரியவர்.1967 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு எதிராக, அனைத்து கட்சிகளையும், ஒரு குடையின் கீழ் திமுக கூட்டணியில் இணைய முயற்சி எடுத்த இருவரில் காயிதே மில்லத்தும் ஒருவர்.
பதினான்கு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய பிள்ளைகள் கல்வியறிவு பெற வழிகோலினார். எளிமை,தேசபக்தி, மொழிப்பற்று, மக்கள் செல்வாக்கு என்று அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தவர், சொந்தமாக கார் இல்லாமலே வாழ்ந்தார்.
காயிதே மில்லத் என்றால் உருது மொழியில் வழிகாட்டும் தலைவர் என்று பொருள். அதற்கு ஏற்ப, வாழ்ந்த, மகத்தான தலைவரை , அவரின் 127 வது பிறந்த நாளில் பெருமையுடன் நினைவு கூர்வோம்.







