காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அசிஸ் தனது 25 வயதில் விமானி ஆகியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா அசிஸ் இந்தியாவின் இளம் வயது பெண் விமானியாக கருதப்படுகிறார். 2011ஆம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போதே, ரஷ்யாவின் விமான தளத்தில் MiG-29 ஜெட் விமானத்தை இயக்கும் பயிற்சிக்காக தனது 15 வயதில் பள்ளி மாணவியாக இருந்தபோதே விமான உரிமம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் பாம்பே ஃப்ளையிங் க்ளப் என்ற விமானம் இயக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து விமானம் இயக்கும் முழு பயிற்சிகளையும் பெற்றார்.
இதுகுறித்து ஆயிஷா அசிஸ் கூறும்போது, “விமானியாக பணியாற்றுவதில் சவால்கள் நிறைந்துள்ளன. ஆனாலும், எனக்கு பயணங்கள் செய்வது சிறு வயது முதலே பிடிக்கும் என்பதால் இந்த பணியை விரும்பி தேர்ந்தெடுத்தேன்.” என்றார்.
மேலும், தினமும் புதுப்புது இடங்களுக்கு பறப்பது, புதிய மனிதர்களை சந்திப்பது என வித்தியாசமான அனுபவங்களை பெறலாம். இது எப்போதும் ஒரே மாதிரியான 9-5 மணிவரை பார்க்கும் டெஸ்க் வேலை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
விமானியாகும் கனவிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் ஆயிஷா, தனது தந்தையை முன்மாதிரியாக கருதுவதாகக் கூறுகிறார். விமானியாக பணியாற்றும்போது, 200 பயணிகளை வைத்து கொண்டு விமானத்தை இயக்குவதால் மன உறுதி அதிகம் தேவை எனவும், பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பெண்கள் கடந்த சில ஆண்டுகளில் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும், அதன் மூலம் அவர்கள் அதிகளவில் வளர்ச்சிப் பெறுவதாக தான் நம்புவதாக ஆயிஷா குறிப்பிடுகிறார். ஆயிஷா இளம் வயதில் விமானியாகி சாதனை படைத்தது, காஷ்மீர் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் இந்தியப் பெண்களுக்கும் ஒரு சிறந்த முன்ணுதாரனமாக விளங்குகிறது.







