31.9 C
Chennai
June 24, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் “கருணாநிதி”

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் “கருணாநிதி”. ஒரு இனத்தின் தலைவனாக, ஒரு போராட்டத்தின் வழிகாட்டியாக, உரிமைப் போரில் பங்குபெற்ற எவருக்கும், உள்ளூர தன்னம்பிக்கை தரும் உந்துசக்தியாக இருப்பவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 

“தமிழ் மக்களுக்குப் பணியாற்ற, என் தலையில் இருக்கும் கிரீடத்தை வேண்டுமானால் யாரேனும் பறிக்க முடியும். ஆனால், என் கையில் இருக்கும் போர்வாளை யாராலும் பறிக்க முடியாது” என 1969-ல் முதன் முறையாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, அவர் இப்படித்தான் பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலம் முழுக்க ஒரு போராளியாகவே தன் வாழ்க்கையை நகர்த்திய கருணாநிதி, “பள்ளியில் சேர்க்காவிட்டால் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்” என சிறுவயதில் பள்ளித்தலைமை ஆசிரியரை மிரட்டியது முதல், 94 வயதில் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்ட தருணத்தில் அவரது உடல் அடக்கத்துக்காக திமுகவினர் நீதிமன்றத்தின் படியேறி போராடி நீதிபெற்றது வரை, அவரது அரசியல் வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் போராட்டங்களால் நிறைந்தவை.

“விவேகம் எனும் வெள்ளி முளைத்து, சாதி மதப்பித்து எனும் சனி தொலைந்தால் தான், சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும்” என போகிற போக்கில் சமூகநீதியை பொட்டில் அறைந்தார் போன்று சொல்லிவிட்டு சென்றவரின் கொள்கையை பின்பற்றி, இன்று அரசியல் போர்க்களத்தில் ஜனநாயக வாள் சுழன்றிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால், அத்தனை பேருக்கும் அரிச்சுவடியாய் இருக்கும் கருணாநிதி, அரசியல் அரிச்சுவடியை கற்றது தந்தை பெரியார் என கொண்டாடப்படும் ஈ.வெ.ராமசாமியிடமும், உரிமையுடன் அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரையிடம் தான்.

இவர்களின் வாரிசாக வளர்ந்துநின்ற கருணாநிதியின் ஆட்சியில் கணக்கிலடங்காத திட்டங்கள் கொண்டுவரப்பட்டன, செயல்படுத்தப்பட்டன. நாட்டுக்கே முன்னோடியாக பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப்பணிகளில் 30 சதவீத உள் ஒதுக்கீடு என அவரது ஆட்சிக்காலத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கோல் அடித்தார்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உருவாக்கம், சாதிமதம் கடந்து ஒன்றிணைய பெரியார் நினைவு சமத்துவபுரம், சமச்சீர்க் கல்வித் திட்டம், தமிழ் செம்மொழி அந்தஸ்து, உழவர் சந்தை, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலக கட்டுமானம் என இன்று நினைவில் வைத்து அசைப்போட பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் கருணாநிதிதான். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் தொழிற்துறை மேம்பாட்டுக்காக சிட்கோ, சிப்காட் வளாகங்கள் உருவாக்கப்பட்டன. இவருடைய ஆட்சியில் தான் வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. குமரியில் 133 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் வள்ளுவரை அமைத்து அழகுபார்த்ததும் அரங்கேறியது. ஆனால், இவரைத்தான் தமிழினத்துக்கு எதிரானவர் என்றும், இவர் தமிழரா என்றும் விமர்சிக்கின்றனர் சிலர். இதையெல்லாம் கடந்து கருணாநிதி ஏன் மக்கள் மனதில் நிற்கிறார் என்பதை அலசுகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

அரசியலில் நாடே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, சட்டப்பேரவையில் பொன்விழா கண்டவர் கருணாநிதி. கருணாநிதிக்கு திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை தான் சொந்த ஊர். முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதிக்கு 1924 ஜூன் 3ம் தேதி பிறந்த கருணாநிதிக்கு முதலில் தட்சிணாமூர்த்தி என்றே குடும்பத்தினர் பெயர் வைத்தனர். அதற்கு காரணம், தாங்கள் போற்றி வணங்கும் தட்சிணாமூர்த்தியின் அனுக்கிரகம் தங்கள் மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் தான்.

இந்த நிலையில் தான், திருக்குவளையில் ஆரம்பக்கல்வியை முடித்ததும் கருணாநிதியின் குடும்பம் திருவாரூருக்கு இடம்பெயர்ந்தது. அங்கிருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு படிப்பதைவிட எழுதுவதிலும் பேசுவதிலுமே நாட்டம் இருந்தது. ஆனால், கருணாநிதி இந்த பள்ளியில் சேர்க்கப்பட்டதே அவர் நடத்திய போராட்டத்தால் தான் என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பு!’

திருவாரூர் பள்ளியில் சேரச்சென்ற கருணாநிதியை பார்த்து, `நீ சீர்திருத்தக் கொள்கை, சுயமரியாதைக் கொள்கை போன்றவற்றைச் சொல்லி, மற்ற மாணவர்களைக் கெடுத்துவிடுவாய். உனக்கு பள்ளியில் படிக்க சீட் இல்லை’ என அந்தப் பள்ளியின் தாளாளர் அனுப்பிவிட்டார். தாளாளரின் முடிவை எதிர்த்த கருணாநிதி, அந்தப் பள்ளியின் எதிரே இருந்த கமலாலயம் குளத்தில் நின்றுகொண்டு, ‘பள்ளியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால், குளத்தில் விழுந்து  உயிர்விடுவேன்’ என அடம்பிடித்து மிரட்டியிருக்கிறார். சிறுவன் செய்கிற செயலா என மிரண்டு போன பள்ளி நிர்வாகம் உடனடியாக கருணாநிதியை பள்ளியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

மொழிப்போர் தீவிரமடைந்த காலகட்டம் என்பதால் அரசியல் ஆர்வமும் கருணாநிதிக்கு முளைவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதைப் போலவே, சுயமரியாதை கருத்துகளை பரப்பினார் கருணாநிதி. மாணவர்களைத் திரட்டி மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்தார். துண்டுப்பிரசுரம், சுவரொட்டி என்று அரசியல் அரிச்சுவடி வாசித்தார். மாணவனாக இருந்துக்கொண்டே மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். இதுதான் பின்னாளில் முரசொலியாக மாறியது. அப்போதே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அண்ணா நடத்திய திராவிட நாடு இதழில் கருணாநிதியின் ’இளமைப்பலி’ கட்டுரை வெளியானது. பிறகு திருவாரூர் வந்த அண்ணாவைச் சந்தித்தார் கருணாநிதி. முதலில் படி! பிறகு எழுது! என்றார் அண்ணா. ஆனால் அதையும் மீறி நாடகங்கள் எழுதி மேடையேற்றினார் கருணாநிதி. பெரிய வசூல். நல்ல வரவேற்பு. மெல்ல மெல்ல பிரபலமாகத் தொடங்கினார். இடையில் பத்மாவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அனுதினமும் அரசியல் காற்றைச் சுவாசித்த கருணாநிதிக்கு, பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதன்பலனாக பெரியாரின் ‘குடி அரசு’ இதழில் துணை ஆசிரியர் வேலை கிடைத்தது. “ஆமையைக் காக்க ஓட்டைப் படைத்த இறைவன், சாலையோரங்களில் வாழும் ஏழைக்கு ஏன் ஒரு வீட்டைப் படைக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். ‘தீட்டாயிடுத்து” என்பன போன்ற பகுத்தறிவுக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி பெரியாருக்குப் பிடித்தமானவரானார்.

சிறுவயதில் இருந்தே நாடகத் தொடர்பும், நாடகம் எழுதுவதில் ஆர்வத்துடன் இருந்த கருணாநிதிக்கு, குடி அரசுவில் வேலை பார்த்தபோதுதான் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. பெரியாரின் சம்மதத்தோடு திரைத்துறைக்கு நகர்ந்தார் கருணாநிதி. அவருக்கு வசனம் எழுத முதல் வாய்ப்பு ‘ராஜகுமாரி” படத்துக்காகக் கிடைத்தது. அதன்பிறகு ‘மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, ‘பராசக்தி’ என்று பல படங்களுக்கும் வசனம் எழுதினார். “கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக” என்பன உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்களை உணர்ச்சி மேலீட்டில் கொந்தளிக்க செய்தன. இதனால் யார் இந்த கருணாநிதி என தமிழ்நாடே திரும்பி பார்த்தது.

அப்போது என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருடன் கருணாநிதிக்கு மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது. கதையும் வசனமும் முக்கியம் என்றாலும், கட்சியும் கொள்கையும் அதைவிட முக்கியமானதாக இருந்தது. ஆகவே, முரசொலியை அச்சுப்பத்திரிகையாக மாற்றும் பணிகலில் ஈடுபட்டார். பெரியார் மணியம்மை ஆகியோரின் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து மோதலால் பெரியாரிடம் இருந்து சிலகாலம் விலகியிருந்தார் அண்ணா. அப்போதுதான், திமுகவை தொடங்கினார். அதுவரை கொள்கை அரசியல் பேசிவந்த அண்ணா, தேர்தல் அரசியலை கையில் எடுத்தார். திமுக அறிவிக்கும் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றுக் கொண்டே, வெகுமக்கள் ஆதரவைத் திரட்ட சினிமாவிலும் தொடர்ந்து இயங்கினார் கருணாநிதி.

1957 பொதுத்தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியது திமுக. சொந்தத் தொகுதியான நாகையில் போட்டியிட விரும்பினார் கருணாநிதி. ஆனால் குளித்தலையைக் கொடுத்தார் அண்ணா. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர். திமுக சட்டமன்றக் கொறடாவாக நியமிக்கப்பட்ட கருணாநிதிக்கு, தொடர்ந்து ஏறுமுகம்தான். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு கருணாநிதியின் வியூகமே காரணம் என்று கணையாழி கொடுத்து தம்பியை பாராட்டினார் அண்ணா. அந்த நொடியில் இருந்தே, கருணாநிதியை முன்வைத்துக் கட்சிக்குள் கலகக்குரல்களும் வெடிக்க ஆரம்பித்தன.

1962 தேர்தலையும் சந்தித்தது திமுக. இந்த முறை 50 இடங்களை கைப்பற்றியது. ஆனால், கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற 15 பேரில் 14 பேர் தோல்வியை தழுவினர். அவர்களில் கருணாநிதி மட்டுமே வெற்றிபெற்றார். இப்போது, திமுக சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக செயல்பட்டார் கருணாநிதி. அப்போதுதான், மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் தயாரானது திமுக. போராட்டக்குழுத் தலைவராக கருணாநிதியே நியமிக்கப்பட்டார். மொழிப்போராட்டம் வெடித்தது. கருணாநிதி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் போராட்டத்தில் குதித்ததால், போராட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் பலரும் தங்கள் உயிரைப் பலிகொடுத்தனர். போராட்டம், கைது, சிறை என கருணாநிதி அலைக்கழிக்கப்பட்டது மக்களிடையே அவருக்கான செல்வாக்கை உயர்த்தவே செய்தது.

இந்த சூழலில் தான், 1967ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது திமுக. விலைவாசி உயர்வு, மொழிப்போர், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி என்றும் எல்லாமுமாக சேர்ந்து காங்கிரஸை தோற்கடித்திருந்தது. சைதாப்பேட்டையில் வென்ற கருணாநிதியைப் பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார் அண்ணா. ‘வரலாற்றின் முதல் பகுதியை நான் எழுதினேன் பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார் என்றார் அண்ணா”. மக்கள் கோரிக்கைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அண்ணா மறைவு என்ற செய்தி வந்து சேர்ந்தது. அவருக்கு பிறகு, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வரானார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கருணாநிதி பக்கமே இருந்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்ததால், முதலமைச்சரானார் கருணாநிதி.

கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருப்பதே நல்லது என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், இப்போதும் நெடுஞ்செழியன் போட்டிக்கு வந்தார். போட்டியைத் தவிர்க்க கட்சியின் சட்டதிட்டங்கள் திருத்தப்பட்டன. அண்ணா காலத்தில் இல்லாத தலைவர் பதவி, புதிதாக உருவாக்கப்பட்டது. கருணாநிதி கட்சியின் தலைவரானார். நெடுஞ்செழியன் பொதுச்செயலாளரானார். கருணாநிதி வகித்த பொருளாளர் பதவி எம்.ஜி.ஆரிடம் சென்றது. அது நாள்வரை காங்கிரஸ் எதிர்ப்பு, மத்திய அரசின் மீதான விமரிசனம் என்ற அளவில் செயல்பட்ட திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றார் கருணாநிதி. இதன்பிறகே, சுதந்தர தினத்தன்று ஆளுநர் தேசியக்கொடி ஏற்றும் நடைமுறை மாற்றப்பட்டு, முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் முயற்சியால் மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த ஆட்சியில் தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அர்ச்சகர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார் கருணாநிதி.

1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்கவைத்தார் கருணாநிதி. இந்த முறை திமுக வென்ற இடங்கள் 183. அதற்கு முன்புவரை அத்தனை இடங்களை எந்தவொரு கட்சியும் பெற்றிருக்கவில்லை. அவ்வளவு பெரிய பிரம்மாண்ட வெற்றி அது. இந்த காலக்கட்டத்தில் தான் தமிழ்நாட்டில் புரட்சிகர திட்டங்கள் பல செயல்படுத்தபட்டன. குறிப்பாக, மனிதனை மனிதனே இழுத்துச்செல்லும் கை ரிக்சாவை ஒழிக்க, கைரிக்சா ஒழிப்புத்திட்டம் கொண்டுவந்தார்.

பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம், உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு திருமணத் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை, குடிசை மாற்று வாரியம் ஆகியவை கொண்டுவரப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்டநாதன் கமிஷப் அமைத்தார். அதன் நீட்சியாக, 25 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தினார். இதுவே எம்.ஜி.ஆர் ஆட்சியில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும், பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டையும் 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தினார். சமூக நீதி வரலாற்றில் இது முக்கியமான முன்னேற்றம் எனலாம்.

இந்த காலகட்டத்தில் தான், எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கியிருந்தார். எம்.ஜி.ஆர் பிரிவால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், 1973 டிசம்பர் 24 அன்று திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, முதலமைச்சர் கருணாநிதியை நிலைகுலைய வைத்தது. சட்டத்தில் இடமில்லை என்ற போதும், அரசின் அறிவிக்கையாக வெளியிட்டு தந்தை பெரியாரின் உடலை, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கருணாநிதி.

காமராஜர் காலத்தில் இருந்து கோரிக்கை அளவிலேயே இருந்த சேலம் உருக்காலைத் திட்டத்தை நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்காவிட்டால், ஒட்டுமொத்த தமிழகமும் ஐந்தாண்டுத் திட்டத்தைப் புறக்கணிக்கும் என்றார் முதலமைச்சர் கருணாநிதி. அந்த அரசியல் அழுத்தமே சேலம் உருக்காலை தமிழகத்துக்குக் கொண்டுவர முக்கிய காரணம் எனலாம். இதேகாலத்தில் தான், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அண்டைநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதாகச் சொல்லி இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்திராகாந்தி தலைமையிலான அரசு. எவ்வளவோ முயன்றும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறினார் கருணாநிதி. ஆனால், இன்றளவும் இதே கச்சத்தீவை காரணம் காட்டி அவர் விமர்சிக்கப்படுவதையும் மறுக்க முடியாது.

”என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டினாலும், நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள்” என உளப்பூர்வமாக கூறியது கண்ணதாசன் தான்.

இளமீசை புதுமீசை
என்றாலும், தமிழ் உருவில்
வுளர்மீசை கொண்ட இவர்,
வற்றாத கலைத் தம்பி,
நட்பினுக் கோர் பிசிராந்தை
நம் கருணாநிதி யென்பேன்”
என பிற்காலத்தில் முரசொலியில் கருணாநிதி குறித்து எழுதினார் கண்ணதாசன்.

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அடுத்துவந்த 13 ஆண்டுகள் அதாவது தாம் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார் எம்.ஜி.ஆர். அத்தருணத்தில் வலுவான எதிர்க்கட்சி தலைவராக மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினார் கருணாநிதி. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக் கேள்வி எழுப்புவது, விமரிசிப்பது, சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பது என்று வீரியமிக்க எதிர்க்கட்சி அரசியலை கையிலெடுத்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு வந்த தேர்தலில் திமுக மீண்டும் அரியணை ஏறியது.

1989 முதல் 1991 வரை மட்டுமே நீடித்த குறைந்த ஆட்சிக்காலத்திலேயே, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இதுக்கீடு உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மகளிருக்கு அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, பட்டியல் சமூகத்தினருக்கு 18 சதவீதம் பழங்குடி சமூகத்தினருக்கு 1 சதவீத தனி இட ஒதுக்கீடு உள்ளிட்டவையும் இந்த ஆட்சிக்காலத்திலேயே கொண்டுவரப்பட்டன.

இதற்கடுத்து 1996-2001 காலத்தில் நெடுஞ்சாலைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சமூக சீர்திருத்தத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை என பல்வேறு துறைகள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதும் இதே ஆட்சிக்காலத்தில் தான். கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம், தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் என கருணாநிதி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்படியான திட்டங்கள் 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது.

இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டம் கொண்டு வந்தது, இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது, தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் விவசாயக் கல்லூரி அமைத்தது, ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கியது, பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது என நாட்டுகே முன்னோடி திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தினார் கருணாநிதி. ஆனால், ஈழப்பிரச்னை அவரது ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

வெறுமனே முதலமைச்சராக மட்டும் இருந்துவிட்டு போனவர் அல்ல கருணாநிதி. தான் கொண்ட கொள்கை நெஞ்சில் கனன்று கொண்டிருக்க, அதனை செயல்படுத்த சீரிய திட்டங்களை முன்னெடுத்து, இன்னும் 50 ஆண்டுகளுக்கும் அத்திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என தொலைநோக்குடன் பங்காற்றியவர். தமிழால் என்ன செய்ய முடியும்..? என்று பேசியவர்களுக்கு மத்தியில் தமிழையே ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடியது முதல், தமிழ் செம்மொழிக்கு மாநாடு எடுத்து கொண்டாடியது வரை, அவரே ஒரு தமிழ் புலவராய் வரலாற்றில் இடம்பிடித்தார்.

மூத்த பத்திரிகையாளர், 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனகர்த்தா, திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் என அவரை குறித்து சொல்ல இன்னும் ஆயிரம் உண்டு. ஆனால், எப்போதும் கருணாநிதி ஆயிரத்தில் ஒருவராகவே வாழ்ந்து மறைந்த கருணாநிதி, அவருடைய தொண்டர்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்றார் அது மிகையில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading