கார்த்திகை திருவிழா; திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் – நியூஸ் 7 தமிழில் நேரலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில், மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மகாதீபம் ஏற்றப்படும் காட்சிகளை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில், மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மகாதீபம் ஏற்றப்படும் காட்சிகளை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக பக்தர்கள் கண்டுகளிக்கலாம். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவிழாவின் சிகரமாக மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இன்று மகாதீபத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கோயிலில் மகா தீபத்தையொட்டி கரும்பு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

நியூஸ் 7 தமிழில் நேரலை 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படும் காட்சிகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிலும், நியூஸ் 7 தமிழ் யூடியூப் பக்கத்திலும், நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் பக்கத்திலும் நேரலையாக பக்தர்கள் கண்டு மகிழலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.