தமது மகளின் கல்வி பணிகள் தொடர்பான விபரங்களை சிபிஐ அதிகாரிகள் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளதாகவுவம் அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், இன்று நடைபெற்ற சோனையின் போது தனது மகள் கல்வி தொடர்பாக செய்த பணிகளின் அனைத்து விபரங்கள் அடங்கிய லேப்டாப்பை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும், தமது மகள் போர்டு தேர்வை எதிர்கொள்ளும்போதுதான் இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவதாக கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சோதனை தொடர்பாக தமது வழக்கறிஞர் சரத்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பையும் கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று நடைபெற்ற சோதனையின்போது, சிபிஐ பறிமுதல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை என சரத்பாபு தெரிவித்துள்ளார். எனினும் கார்த்தி சிதம்பரத்தின் மகள் கல்விப் பணிகள் அடங்கிய லேப்டாப் மற்றும் ஐபேடை சிபிஐ சட்டவிரோதமாக பறிமுதல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சரத்பாபு, இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சட்டவிரோதமான பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் சரத்பாபு தெரிவித்துள்ளார்.








