கர்நாடகா பேருந்து விபத்து – பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவிப்பு!

கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தைன்யர் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்புறம் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி சொகுசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து, லாரி இரண்டும் தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய சிலர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.