குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற கர்ணன் பட காட்சிகள்

1964ம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியான திரைப்படம்… முதல் நாள் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் அளித்து வரவேற்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்… அந்தக் காலத்தில் 40 லட்சம் ரூபாய்…

1964ம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியான திரைப்படம்… முதல் நாள் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் அளித்து வரவேற்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்… அந்தக் காலத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கர்ணன் திரைப்படத்தின் பிரமிக்க வைத்த வசூல் என்ன தெரியுமா?

சிவாஜி நடிக்க B.R.பந்துலு தயாரித்து, இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் கிருஷ்ணராக தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் அர்ஜுனனாக முத்துராமன், துரியோதனனாக அசோகன் நடித்திருந்தனர். நடிகைகள் தேவிகா, சாவித்ரி மற்றும் கர்ணனின் அம்மாவான குந்தியின் கதாபாத்திரத்தில் எம்.வி.ராஜம்மாவும் மகாபாரத கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். நாகராஜன், சக்தி கிருஷ்ணசாமி உரையாடலை எழுதியிருந்தனர்.

https://www.youtube.com/watch?v=reMNlZ6hDzw

இறுதிக்கட்ட போர் காட்சிக்காக மத்திய அரசின் அனுமதியுடன், இந்திய ராணுவத்தின் குதிரைப்படை மற்றும் காலாட்படை குருக்ஷேத்திரத்தில் உள்ள இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு கர்ணன் திரைப்படத்தின் போர்க் காட்சிகள் படமாக்கப்பட்டன, 61 குதிரைப் படைப்பிரிவின் குழுக்களுடன் 80 யானைகள், 400 குதிரைகள் மற்றும் மூன்று கேமராக்களைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டன. ஜெய்ப்பூர் அரண்மனையில் மட்டுமின்றி பெங்களூரு அரண்மனையிலும் முதன்முதலாக படப்பிடிப்பு நடைபெற்றது. கர்ணன் திரைப்படம் வெளியான பிறகு, குருக்ஷேத்திரத்தில் நடந்த போர் காட்சிகளுக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து ரதங்களும் தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

1964ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலன்று கர்ணன் திரைப்படம் வெளியிடப்பட்டது, சென்னையில் சிவாஜியின் சாந்தி திரையரங்கில் 60 அடி உயரமுள்ள ரதம் இடம்பெற்ற பேனர் இடம் பெற்றது. முதல் நாள் படம் பார்க்க வந்தவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார் சிவாஜி கணேசன்.

ஆசியாவின் 2-வது மிகப்பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் மற்றும் சென்னை சாந்தி உட்பட நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது கர்ணன் திரைப்படம். 80 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய போதிலும், பன்னிரண்டு திரையரங்குகளில் இருந்து பச்சை விளக்கு திரைப்படத்திற்காக கர்ணன் வழிவிட்டான். மதுரை தங்கம் திரையரங்கில் கர்ணன் திரைப்படம் 14 வாரம் ஓடி ஒன்றரைக்கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியது,

1964ம் ஆண்டு பொங்கலன்று பிரமாண்டமாக வந்த சிவாஜியின் கர்ணன், ஆண்டு பல கடந்தாலும், உள்ளத்தில் நல்ல உள்ளமாக குடிகொண்டுள்ளான்.

-ஜே.முஹமது அலி, நியூஸ்7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.