பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா

அரசு பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வறை பயிலும் மாணவ, மாணவியருக்காக கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக…

அரசு பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வறை பயிலும் மாணவ, மாணவியருக்காக கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ இலட்சக்கணக்கான மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ பள்ளி, வட்டாரம்‌, மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்‌ திருவிழா நடத்தப்படும்‌” என சட்டப்பேரவையில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கலை என்பது குழந்தைகள்‌ தங்கள்‌ கருத்துக்களை, தாங்கள்‌ நம்புவதற்கும்‌,
சாத்தியமானவற்றை ஆராயவும்‌ கற்றுக்‌ கொள்வதற்கும்‌ ஒரு இடம்‌. கலைச்‌ செயல்பாடுகள்‌, சூழந்தைகளின்‌ பிற கற்றல்‌ செயல்முறைகளில்‌
மிகவும்‌ சுறுசுறுப்புடனும்‌ ஆழமாகவும்‌ ஈடுபட உதவுகிறது” என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலை குழந்தைகளின்‌ முடிவெடுக்கும்‌ திறனை மேம்படுத்துவதோடு
மட்டுமல்லாமல்‌ அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9 வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும்‌, 6 முதல்‌ 12 வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு கலைத்‌ திருவிழாவும் நடத்தப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைத்‌ திருவிழா மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.  பிரிவு 1: 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரையிலும்  பிரிவு 2: 9 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு வரையிலும்  பிரிவு 3: 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு வரையிலும் நடத்தப்படுகிறது. 

பள்ளி அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ வெற்றிபெறும்‌ மாணவர்களை வட்டார அளவிலும்‌, வட்டார அளவில்‌ வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட
அளவிலும்‌, மாவட்ட அளவில்‌ வெற்றி பெறும்‌ மாணவர்கள்‌ மாநில அளவில்‌
நடைபெறும்‌ போட்டிகளிலும்‌ பங்கேற்கச்‌ செய்ய வேண்டும்‌ என முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான கலைத்‌ திருவிழா இறுதி போட்டிகள்‌ ஜனவரி மாதத்தில்‌ நடத்தப்பட்டு வெற்றி பெறும்‌ மாணவர்களுக்கு பரிசுகளும்‌, சான்றிதழ்களும்‌ மற்றும்‌ கலையரசன்‌,
கலையரசி என்ற விருதுகளும்‌, மாநில அளவில்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ வழங்கப்பட்டு மாணவர்களின்‌ கலைத்திறன்கள்‌ ஊக்கப்படுத்தப்படும்‌ என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  மாநில அளவில்‌ வெற்றி பெறும்‌ மாணவர்களில்‌ தரவரிசையில்‌ முதன்மை பெறும்‌ 20 மாணவர்கள்‌ வெளிநாடுகளுக்கு கல்விச்‌ சுற்றுலா அழைத்துச்‌ செல்லப்படுவர்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்காணும்‌ அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட
வேண்டும்‌ என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி அளவில்‌ 23.11.2022 முதல்‌ 28.11.2022 க்குள்‌
வட்டார அளவில்‌ 29.11.2022 முதல்‌ 05.12.2022 க்குள்‌
மாவட்ட அளவில்‌ 06.12.2022 முதல்‌ 10.12.2022 க்குள்‌
மாநில அளவில்‌ 03.01.2023 முதல்‌ 09.01.2023 க்குள்‌

அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்‌ கலைத்திருவிழா போட்டிகளில்‌
பெருமளவு மாணவர்களின்‌ பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய்‌
தலைமையாசியர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.