அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது உரையின் போது, மோடி பெயர் குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீதி வெல்லும்! வயநாடு தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி. அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு கிடைத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
ராகுல்காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த இந்த முடிவு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.







