ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கிளர்ச்சி ஏற்படாமலே, அதற்கான தேவை இல்லாமலே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது என்றும் அப்போதைய தென்மண்டல ஐ.ஜி, நெல்லை சரக டி.ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
போராட்டங்களின் 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது. பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை; எந்த ஒரு போலீசாரும் காயமும் அடையவில்லை. பொதுமக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாத போதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுவும் கலைந்து ஓடிய போராட்டக்காரர்களை குறிவைத்தும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரரர்கள் சிதறி ஓடினர்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.








