பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அன்புமணி கருத்து

புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து 12 கிராம மக்களை சந்தித்து பின்னர் அரசிடம் பரிசீலனை செய்ய பாமக சார்பில் ஜி.கே.மணி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று காஞ்சியில் அன்புமணி…

புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து 12 கிராம மக்களை சந்தித்து பின்னர்
அரசிடம் பரிசீலனை செய்ய பாமக சார்பில் ஜி.கே.மணி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று காஞ்சியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம் பகுதியில் புதிய சென்னையின் இரண்டாவது விமான
நிலையம் அமைய உள்ளதாகத் தகவல் வெளியானது. அங்கு உள்ள 12 கிராமங்களை உள்ளடக்கி இந்த விமான நிலையம் அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்கள், கருப்புக்கொடி, கிராம சபை கூட்டம் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி
ராமதாஸ் தலைமையில் கிராம மக்கள் கலந்துகொள்ளும் கருத்துக் கேட்புக் கூட்டம்
காஞ்சிபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நான்கு கிராமங்களைத் தவிர
மற்ற கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்களில் 9 பேர் பேச
அனுமதித்தனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், பாமக பொருளாளர் திலகபாமா, கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பேசினர்.

அதைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ் உங்களுடைய கருத்துகள் கேட்கப்பட்டன. நம்பிக்கையாக இருங்கள் என கிராம மக்களிடையே தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கிராம மக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. பங்கேற்ற அனைவரும் புதிய விமான நிலையம் தங்கள் பகுதிக்கு வேண்டாம் விவசாய நிலங்கள் தான் வேண்டும் எனத் தெரிவித்தனர். எதன் அடிப்படையில் புதிய விமான நிலையம் இங்கே அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. எனவே, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அதாவது ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு
மேற்கண்ட கிராமங்களில் நேரடியாகச் சென்று மக்களிடம் கருத்து கேட்டு அவற்றை
அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

அரசிடம் இது குறித்து என்னென்ன திட்டங்கள் உள்ளன. யார் செயல்படுத்த
உள்ளார்கள் என்பது குறித்து பேசவுள்ளோம். பொதுவாக நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் அமைக்கப்பட்ட சிப்காட்டில் நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சியமைத்தால் தமிழக தொழிற்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் 80 சதவிகிதம் பணிபுரிவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அது குறித்து ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே, அரசிடம் என்ன மாதிரி திட்டங்கள் உள்ளன. இழப்பீடு நிவாரணம் எவ்வளவு, கிரவுண்ட் வேல்யூ, மார்க்கெட் வேல்யூ உள்ளிட்ட பல கேள்விகள் குறித்து இந்த எழுவர் குழு பரிசீலனை செய்யும் நம்பிக்கையாக இருங்கள் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.