ஜெயிலர் திரைப்படத்தின் HD பதிப்பு ஆன்லைனில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதேபோல் இரண்டாவது வார இறுதி நாள்களை கடக்கும் போது ஜெயிலர் திரைப்படம் மொத்தம் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது வெளியான தகவலின் படி, ஜெயிலர் படம் ரூ.600 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மறுபுறம் ‘ஜெயிலர்’ படத்தின் HD பிரிண்ட் ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது HD பிரிண்ட் வெளியாகி உள்ளதால் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
https://twitter.com/rhevanth95/status/1696593391755333913
சென்னை ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸின் இயக்குநர் ரேவந்த் சரண், தனது பதிவில், “ஜெயிலர் திரைப்படத்தின் HD பிரிண்டின் எந்த வடிவத்தையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும், மக்கள் அதை திரையரங்குகளில் ரசிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். எந்த விலையிலும் திருட்டுத்தனத்தை ஆதரிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்
ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ள நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பை அந்நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







