சிறுத்தை சிவாவின் பார் போற்றும் படமான விஸ்வாசத்தை பார்த்து மயங்கிய ரஜினிகாந்த் அந்த இயக்குநரை அழைத்து அதேபோல் செண்டிமெண்ட் நிறைந்த ஒரு வில்லேஜ் + கொல்கத்தா சிட்டி சப்ஜெக்ட் கொண்டுவாங்க நம்ம பன்றோம் ‘ஹா ஹா ஹா(ரஜினி போல் சிரித்துக்கொள்ளவும்) என கூற.. அதேபோலானதோரு செண்டிமெண்ட் சப்ஜெக்டை தயார் செய்து தங்கச்சி பாசத்தில் அதை ஊறவைத்து அண்ணாத்த என தலைப்பிட்டு கொடியில் காயப்போட்டார் சிறுத்தை சிவா. படம் வெளியானவுடன் ஆடியன்ஸும் தங்களின் பங்கிற்கு படத்தை மீண்டும் துவைத்தெடுத்து துவம்சம் செய்து கிழித்தெடுத்து ‘புஹா ஹா ஹா’ என சிரித்தெடுத்தார்கள். தர்பாரை தொடர்ந்து அண்ணாத்த படத்தையும் ஆடியன்ஸ் கூப்பில் உட்காரவைத்த நிலையிலும் சற்றும் மனம் தளராமல் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடித்தீர்த்தார்கள் படக்குழுவினர்.
இன்னொருபுறம் கோலமாவு கோகிலா , டாக்டர் என இரண்டே படங்களில் கோலிவுட்டுக்கு புதியதொரு காமெடி ரூட்டை போட்டுக்கொடுத்து கில்லி போல் விளையாடிக்கொண்டிருந்தார் நெல்சன் திலீப்குமார். மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான black humour எனும் ஜானரில் கச்சிதமாக விளையாடி வெற்றிக்கனியை ஈட்டினார். இதுபோக விழாக்களிலும், பேட்டிகளும் தன்னுடைய படங்களின் மேக்கிங் மற்றும் நடிகர்கள் தொடர்பாக நகைச்சுவை பாணியில் அவர் அடித்த கவுண்டர்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆனது. காமெடியிலும் கவுண்டர்களிலும் சிவகார்த்திகேயனுக்கே tough கொடுப்பார் போலையே, இவரே ஏன் ஹீரோவாக நடிக்க கூடாது என்றெல்லாம் இணையவாசிகள் ஹார்டின்கள் விடத்தொடங்கினார்கள்.
ஆக இணையவாசிகளிடம் பயங்கரமாக ஹாஹா ரியாக்ஷன் வாங்கிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார், ஹார்டின் ரியாக்ஷன் வாங்கி கொண்டிருந்த நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்தார். இந்த ஹார்டினும் ஹாஹாவும் இணைந்து ஒரு ஆஹா ஹார்டினாக உருவெடித்து சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கப்போகிறார்கள் என்று ஒட்டுமொத்த ஆடியன்ஸும் காத்துக்கொண்டிருக்க குபீர் என திரைக்கு வந்தது நெல்சனின் மூன்றாவது காவியமான பீஸ்ட். rest is history!
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெற்றியடைந்ததற்கு கூட நெல்சனை போட்டு வறுத்தெடுத்தார்கள் இணையவாசிகள். பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிக்கு திரைக்கதை சுத்தமாக பிடிக்கவில்லை எனவும் இதனால் தான் நடிக்கும் நெல்சனுடைய திரைக்கதையின் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது எனவும் செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமல்லாமல் நெல்சனுடைய படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் விலகிவிட்டார் என்றுகூட தகவல் பரவின. இந்நிலையில் குடுத்த வாக்கை சினிமாவில் தான் மீறியதே இல்லை என்ற கூற்றுக்கேற்ப படத்தில் நடிக்கும் தகவலை மறைமுகமாக உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார்.
இருப்பினும் படத்தின் கதையில் சூப்பர் ஸ்டார் சிறிய மாற்றங்களை கூறியுள்ளதாகவும் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கத்தை சூப்பர் ஸ்டாரின் favourite இயக்குநரான கே.எஸ். ரவிகுமார் மேற்பார்வையிடுவார் என்ற unofficial தகவலும் வெளிவந்தது. இதைக்கண்ட ரஜினி ரசிகர்கள், ‘ வாவ் நம்ம தலைவரே கதைய மாத்திருக்காரா அதுவும் நம்ம தலைவரை வச்சி 90கள்ல முத்து, படையப்பான்னு மாஸ் பண்ண கே.எஸ். ரவிக்குமாரும் இருக்காரா.!! அப்படினா பளாக் பஸ்டர் வெற்றி ‘ தான் என இணையத்தை தெறிக்கவிட்டனர். மேலும் கவுண்டமணி, ‘வடக்குப்பட்டி ராமசாமி பணத்தை எடுத்து வை!’ என குஷியாக கிளம்புவது போல, ‘ஆயிரம் கோடி வசூல் confirm’ என குஷியானார்கள்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பிடப்பட்டு அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ஆயிரம் கோடி வசூலுடன் 365வது நாளில் தலைவரின் ‘ஜெயிலர்’ என போஸ்டர் அடிக்க தயாரானார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் ஒன்றை மறந்தவிடக்கூடாது எனக்கூறும் சினிமா வல்லுநர்கள், ‘சூப்பர் ஸ்டார் திரைக்கதை அமைத்த வள்ளி, பாபா உள்ளிட்ட படங்களும் கே.எஸ். ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தையும் நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும் எனவும் அவர்களின் தலையீட்டாலும் மேற்பார்வையாலும் மட்டுமே படம் வெற்றியடைந்துவிடாது எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும், விக்ரம் படத்திலேயே கமலின் தலையீடு இல்லாததால் தான் கால் நூற்றாண்டுக்கு பிறகு அவரின் திரைப்பயணத்தில் ஒரு அதிசயம் நடந்திருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் ஹிண்ட் கொடுக்கின்றனர். இதுபோக கமல் படம் ஓடவில்லை என்றால் கூட காலத்தால் அழியாத கல்ட் படம் என்று கூறிவிடுவார்கள், நம்முடைய படங்கள் ஓடவில்லை என்றால் பாபா, லிங்காவை போல் see more ஆக்கிவிடுவார்கள் எனவே பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் ஆருடம் கூறுவருகிறார்கள்.
என்னதான் பீஸ்ட்டில் சறுக்கினாலும் நெல்சன் ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி என்பதில் யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது. கொரோனாவில் பரிதவித்து தோய்ந்துபோயிருந்தவர்களை டாக்டர் திரைப்படத்தின் மூலமாக திரைக்கு அழைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்பியவர் நெல்சன். எனவே சூப்பர் ஸ்டாரைக்கொண்டு கிளாஸாகவும் மாஸாகவும் நிச்சயம் நம்மை மகிழ்விப்பார் எனக்கூறி ஜெயிலர் படம் 365 நாட்களை கடந்து ஆஹா ஹார்டின்களுடன் மாபெரும் வெற்றியடைந்துவிடும் என்றே நம்பப்படுகிறது.
இந்நிலையில் படத்திற்கான ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் நேற்று இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றுள்ளது. படத்தில் ஜெயிலார ரஜினி வருவதால் அதுதொடர்பான கெட்டப்புகளுடன் சக நடிகர்களுடன் போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் படம் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில், பல ஆயுதங்களையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளதாம். கூடிய விரையில் சூப்பர் ஸ்டாரின் பொறிபறக்கும் புகைப்படங்களுடன் போஸ்டர் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அவரின் ரசிகர்கள் ஜெயிலர் என்ற ஹாஷ்டேக்குகளை போட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னொரு புறம் வருமான வரி தினத்தையொட்டி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினர். இவ்விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகளான செளந்தர்யா பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல சூப்பர் Tax payer என்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாறம் சூட்டியுள்ளார். ஆக super taxpayer என்கிற ஹாஷ்டேக்கையும் போட்டு ட்விட்டர் வாசிகள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.







