தன்கர் சிறந்த குடியரசு துணைத் தலைவராக இருப்பார்: பிரதமர்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் சிறந்த குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம்…

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் சிறந்த குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரும், எதிர்கட்சிகள் சார்பி்ல மார்கரெட் ஆல்வாவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், ஜக்தீப் தன்கர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்பட பலர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் நிச்சயம் திகழ்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவரான ஜெக்தீப் தன்கரால் நாடு பெரிதும் பயனடையும் என்றும், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த விவசாய பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஜக்தீப் தன்கரின் மக்களுடன் இணைந்து பிரச்னைகளைத் தீர்க்கும் அணுகுமுறையும், நிர்வாக அனுபவமும் நாட்டின் வளர்ச்சியையும், நாடாளுமன்ற செயல்பாட்டையும் விரைவுபடுத்துவதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஜக்தீப் தன்கர் உண்மையான மண்ணின் மைந்தர் என்றும், அவரது பரந்துபட்ட அனுபவமும், உறுதியான செயல்பாடும் அவரை உதாரணமான குடியரசு துணைத் தலைவராக ஆக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.