“அண்ணனுக்கும் பிறந்தநாள்… தம்பிக்கும் பிறந்தநாள்… மகிழ்வான தருணம் இது” – நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் வெளியான பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் கவர தவறுவதில்லை…

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் வெளியான பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் கவர தவறுவதில்லை என்றால் மிகையாகாது. பலவகை இசையை தன்னுடைய பாடல்களின் மூலம் வெளிப்படுத்திய இவரை ‘இசைஞானி’ என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அவர் தனது 81-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை – மேற்கிந்திய தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்!

அதேபோல் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவர், மெளனராகம், நாயகன், தளபதி, அலைபாயுதே உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை அள்ளித் தந்தவர். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள மணிரத்னமும் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன், தனது X தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

“ இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்… பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க.”

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.