”தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்” – தமிழ்நாட்டில் தாஜ்மஹால் பாணியில் தாய்க்கு நினைவகம்…!

திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் காதலிக்காக கட்டப்பட்ட தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டின் திருவாரூர் அருகே அம்மையப்பன்…

திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் காதலிக்காக கட்டப்பட்ட தாஜ் மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டின் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற ஊரில், தாயின் நினைவாக தாஜ் மஹால் வடிவமைப்பில் கட்டடத்தை மகன் கட்டியுள்ளார். இந்த நினைவிடம் ‘தென்னகத்தின் தாஜ் மஹால்’ என பேசுபொருளாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்திவந்த அப்துல்காதர், தனது குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மனைவி ஜெய்லானி பீவி மனம் தளராமல் கடையை நிர்வகித்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு உயர்த்தினார்.

அவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூது பி.ஏ. படித்துவிட்டு சென்னையில் அரிசி மொத்த விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டு தனது 68 ஆவது வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தன்னைப் பற்றி கவலைப்படாமல், சகோதரிகளையும், தன்னையும் உயர்ந்த நிலையில் வாழ வைத்துச் சென்ற ஜெய்லானி பீவி இழப்பை அம்ருதீன் ஷேக் தாவூத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தாய் மீதான அன்பின் அடையாளமாக, சொந்த கிராமமான அம்மையப்பனில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்தார். ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களைக் கொண்டு ரூ.5 கோடி மதிப்பில் நினைவு மண்டபத்தை கட்டியுள்ளார். நினைவு மண்டபத்தில் ஜெய்லானி பீவியின் சமாதி, ஐந்து வேளை தொழுகை நடத்தும் வகையில் மதரஸா அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில் ஜெய்லானி பீவி உயிரிழந்ததால், அமாவாசை நாள்களில் பிரியாணி சமைத்து, ஆயிரம் பேருக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அம்ருதீன் ஷேக் தாவூத் கூறியதாவது: ”எனது தாய் இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது இருப்பு நீடித்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரின் சம்மதத்துடன், அம்மையப்பனில் உள்ள ஒரு ஏக்கரில் நினைவிடம் கட்ட முடிவெடுத்தோம். நினைவிட கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற்று முடிவுற்று, கடந்த ஜூன் 2இல் திறக்கப்பட்டது.

நினைவிடம் முகலாய கட்டடக் கலையில் கட்ட விரும்பி பணிகளைத் தொடங்கினோம். திருச்சியைச் சேர்ந்த வடிவமைப்பாளரிடம் ஆலோசனை நடத்தியபோது, நாங்கள் கூறிய யோசனை தாஜ் மஹால் வடிவமைப்பு போன்று உள்ளதாகத் தெரிவித்தார். உடனடியாகப் பணிகளைத் தொடங்கினோம்.

நினைவிடம் தாஜ் மஹால் வடிவமைப்பில் இருக்கும் என்பதால், 80 டன் வெள்ளை நிற பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டன. கட்டுமானப் பணியில் வட இந்திய, உள்ளூர் தொழிலாளர்கள் இணைந்து ஈடுபட்டு கட்டடத்தை கட்டி முடித்தனர். ஒரு தாயின் பாசத்துக்குச் செலுத்தும் மரியாதைதான் இந்த நினைவிடம். பெற்றோரைப் போற்றுவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக இது அமையும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.