மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீது கடந்த 2 நாட்களாக காரசார விவாதம் நடைபெற்றது.
இந்தநிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவையில் இன்று பதில் அளிக்கவுள்ளார். இதனிடையே, மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இன அழிப்பு வெட்கக்கேடானவை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். இது அவரது கண்காணிப்பில் நடந்தது. அதில் அரசியல் செய்யப்படுவது மிகவும் வெட்கக்கேடானவை என்றும் அவர் கூறினார். அதுவும் அவர் தவறு.
இன அழிப்பு பிரச்னையை எழுப்புவதும் விவாதிப்பதும் ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
மேலும், கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.







