இந்திய விமானிக்கு இஸ்ரேலின் உயரிய வீரதீர விருது!

விமானத்தைக் கடத்தும் முயற்சியைத் தடுத்து 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு விருது வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவிப்பு.

துபாயைச் சேர்ந்த ஃப்ளைதுபாய் விமானத்தின் காக்பிட்டுக்குள், சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி 174 பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலின் குடிமக்களுக்கான அதிபரின் வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.

இது அந்நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வீரதீர விருதாகும்.இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஸ்மித் மச்சார் உடல்நலம் தேறியதும் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டைச் சேர்ந்த சக விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி, விமானத்தின் காக்பிட்டுக்குள் கோடாரியால் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இருப்பினும், பலத்த காயங்களுடனும் அதிக ரத்தப்போக்குடனும் இருந்த அவர், காக்பிட் கதவைத் திறந்தார். இதனால், விமானத்தில் இருந்த இஸ்ரேலியப் பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.

இஸ்ரேலிய உளவுத்துறையை மேற்கோள் காட்டி வெளியான தகவல்களின்படி, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, டெல் அவிவ் நகருக்குப் பறக்கச் செய்து, அங்குள்ள கட்டடம் ஒன்றின் மீது மோதச் செய்வதே ஹம்மாம் அல்-ஹம்மாமியின் அசல் திட்டமாக இருந்துள்ளது. ஆனால், கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான நடவடிக்கை இந்தத் திட்டத்தை முறியடித்தது. தற்போது, இந்திய விமானி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகையில், “இன்று நாம் கௌரவிக்கும் இஸ்ரேலிய வீரர்களுடன் இணைந்து, இந்தியாவின் கேப்டன் ஸ்மித் மச்சார் விரைவில் முழுமையாகக் குணமடைய எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது அசாத்தியமான துணிச்சலும், தொழில்முறைத் திறனும் மிகப்பெரிய பேரழிவைத் தடுத்தன.

அவர் உடல்நலம் தேறியதும், இஸ்ரேல் மக்களின் சார்பாக, இஸ்ரேலின் குடிமக்களுக்கான அதிபரின் வீரதீர விருதை அவருக்கு வழங்குவது எனக்குப் பெருமையாக இருக்கும்” என்றார். விமானத்தைக் கடத்தி விபத்துக்குள்ளாக்க முயன்ற சக விமானியை மடக்கிப் பிடித்து, பெரும் பேரழிவைத் தடுத்த ஐந்து இஸ்ரேலியர்களுக்கும் இஸ்ரேல் அதிபர் வீரதீர விருதுகளை வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.