இஷான் கிஷனின் அதிரடி வீண் – 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது லக்னோ!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மாப் அபாரமாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தனர். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா அவுட்டாக, 59 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷனும் பின்னர் தனது விக்கெட்டை இழந்தார். இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.