தவெக-வின் தேர்தல் வியூக பொறுப்பாளராகிறாரா பிரசாந்த் கிஷோர் ?

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கிய விஜய்,  2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு ஓராண்டாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார். இதற்கிடையில் அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து இடைநீக்கம்  செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

அதன்படி தவெக-வின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி இந்தாண்டு மார்ச் முதல் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜய்யை இன்று(பிப்.10) சந்தித்துள்ளார். சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலத்தில்  பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆதவ் அர்ஜுனாவும் பங்கேற்றார்.

பேச்சு வார்த்தை நடந்து முடிந்த நிலையில், தவெக- வின் தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி ஆகியவை குறித்து அடுத்த கட்ட முடிவுகளை பிரசாந்த் கிஷோர் எடுப்பார் எனவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.