மறைந்த பாடகர்களின் குரல்களை உருவாக்க அனுமதி பெறப்பட்டதா? – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று தகுந்த தொகை வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள…

மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று தகுந்த தொகை வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்.9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே படத்தின் இறுதிகட்ட வேலைபாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று தகுந்த தொகை வழங்கப்பட்டதா என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “மறைந்த பாடகர்களின் குரல் வழிமுறைகளை பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தகுந்த ஊதியத்தை அனுப்பினோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அது அச்சுறுத்தலும் தொல்லையும் அல்ல” என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.