முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துகள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பாஜவிற்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை என விமர்சித்ததோடு, நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தற்போது வரை ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே குற்றம் சாட்டுகிறது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். தமது ஆட்சியில் 22 மாதங்களாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாதவர் பொருளாதார நிலையைப் பற்றி பேசுவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்மோகன் சிங் போன்ற ஒருவரிடம் இருந்து இது போன்ற கருத்துகளை எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ள நிர்மலா சீதாராமன், இந்தியாவை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ள அவரது கருத்துகள் தம்மை மிகவும் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல்களுக்கு தலைமை தாங்கியது என குற்றம் சாட்டிய அவர், வெளிச்சத்திற்கு வந்த என்.எஸ்.ஏ., (NSE) ஊழல் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார். பஞ்சாப் தேர்தல்களின் சூழலில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்று சொல்ல என்.எஸ்.ஏ., (NSE) ஊழல் போதும் என்றார்.
தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் சேர்ந்து ஊழல் செய்திருப்பதாக செபி குற்றம் சாட்டியுள்ளது. இவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2013ல் NSE தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.









