தனது தலைமையிலான அரசின் மூன்றாம் ஆண்டு பயணத்தை மாற்றங்களுடன் பயணிக்கத் தயாராகியுள்ளாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? மே மாதம் அமைச்சரவை மாற்றமா?
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றங்கள் அவ்வவ்போது நடைபெற்று வருகின்றன. நிர்வாக வசதிக்கானதாக அந்த மாற்றங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்படும். அதுபோன்றே நிர்வாக வசதிக்காகவும், துறைகளின் வளர்ச்சிக்காகவும் அமைச்சர்கள் நிர்வகிக்கும் துறைகள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அமைச்சரவையில் சுழற்சி முறையிலான மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
2 முறை மாற்றங்கள்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2021 ஆம் ஆண்டு மேம் மாதம் பொறுப்பேற்றார். 34 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றது. அவ்வவ்போது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எழும்போதெல்லாம், அமைச்சரவை மாற்றங்கள் குறித்த தகவல் வெளியாகி வந்தாலும் 2 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
2022 மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாக 3 அமைச்சர்களிடம் இருந்த அரசு நிறுவனங்கள் சார்ந்த பொறுப்புகள் நிர்வாக வசதிக்காக மாற்றிக்கொடுக்கப்பட்டது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்து, 35 ஆவது அமைச்சராக அமைச்சரவையில் இணைந்தார் உதயநிதி. அவருடன் 10 அமைச்சர்கள் நிர்வகிக்கும் பொறுப்புகளிலும் மாற்றம் செய்யப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம்
எஸ்.முத்துசாமி – வீட்டு வசதி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறையுடன் நகர் வளர்ச்சி திட்டங்கள் ஒப்படைப்பு
கே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்பு
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உடன் காதி மற்றும் கிராம தொழில் வாரியம்
கே.ராமசந்திரன் – வனத்துறையிலிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றம்
ஆர்.காந்தி – கைத்தறி துறையுடன் பூதான் மற்றும் கிரமதன் பொறுப்பு
பி.கே.சேகர் பாபு – இந்து சமய அறநிலையத்துறையுடன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் புள்ளியல் கூடுதலாக ஒதுக்கீடு
மதிவேந்தன் – சுற்றுலாத்துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றம்
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவையில் மாற்றம் செய்யும் சூழல் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில் 2022 டிசம்பர் 14 ஆம் தேதி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மூன்றாம் முறையாக மாற்றம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டுகளை நிறைவுசெய்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருகிறார். நிர்வாக வசதிக்காகவும், துறைகளின் வளர்ச்சிக்காகவும் அமைச்சர்கள் நிர்வகிக்கும் துறைகள் மாற்றப்படவுள்ளது. சுழற்சி முறையிலான நிர்வாக மாற்றம் துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் என எண்ணுகிறார். மூன்றாம் முறையாக மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகின்றது. 2 பேரை விடுவித்து, 2 பேரை சேர்க்கவும் திட்டமிட்டு வருகிறார்.
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை என கருத்து எழும்பிய போது நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் தான் என பதிலளித்திருந்தார் முதலமைச்சர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருநெல்வேலி & தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இல்லை என்ற கருத்தை போக்கும் வகையில் அங்கிருந்து ஒருவருக்கும் வாய்ப்பளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர்கள்?
துணை முதலமைச்சர் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், அந்தப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அமைச்சர்களுக்கு இணையான அதிகாரமே இருக்கும். இருப்பினும், அரசியல் ரீதியாக அடுத்தக்கட்ட தலைமையை வெளிப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் பொறுப்புகளை வகிப்பவர்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக இருந்தவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது துணை முதலமைச்சராக இருந்தார். அவருக்கு அடுத்ததாக அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது துணை முதலமைச்சராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இருவருமே தாங்கள் சார்ந்த கட்சியின் தலைமைகளாக இருந்தவர்கள்.
திமுகவிலும் அடுத்தக்கட்ட தலைமை குறித்த கேள்விகளுக்கு விடையாக நிர்வாகிகளால் வெளிப்படுத்தப்பட்டு வருபவர் உதயநிதி ஸ்டாலின். மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொண்டால் அப்போது துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். உதயநிதிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தொடர்ந்து தகவல் வெளியானாலும், மேலும் 2 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்புகளை வழங்கலாமா? எனவும் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எப்போது மாற்றம்?
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. அதற்கடுத்ததாக மே 4 அல்லது மே 10ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஓய்வு பெறவுள்ளனர். அந்தப் பொறுப்புகளில் புதியவர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன், தனது தனிச்செயலாளரில் ஒருவரையும் மாற்ற ஆலோசித்துள்ளார். மாற்றங்களை மேற்கொள்ள தயாராகிவிட்டாரா? அல்லது தள்ளிப்போகுமா? என கேள்விகள் எழுந்தாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் 3 ஆம் ஆண்டில் மாற்றங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதே பெரும்பாலான முக்கிய உயர் அலுவலர்கள், திமுக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
-இலா. தேவா இக்னேசியஸ் சிரில்









