இன்று நடைபெறும் ஐபில் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த 31ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.
தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த போட்டியில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் வைடு, நோ-பால் தாறுமாறாக வீசியதால் கோபமடைந்த கேப்டன் டோனி கடுமையாக கண்டித்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்து வீசுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்ளது.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் ‘சரண்’ அடைந்தது. அந்த ஆட்டத்தில் 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி அதன் பிறகு திலக் வர்மாவின் (84 ரன்) அரைசதத்தால் 170-ஐ தாண்டியது. ஆனாலும் அந்த இலக்கை பெங்களூரு 16.2 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. இப்போது உள்ளூரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் மும்பை களம் இறங்குகிறது. உள்ளூர் சூழல் நிச்சயம் அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும்.
இரண்டு முன்னாள் சாம்பியன்களாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.







