அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ பழனியில்…

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ பழனியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு இம்மாநாட்டிற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிக சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 8 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் கலையரங்கரம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகம் அறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.