சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சனாதன தர்மம் அனைவரின் நலனையும் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சனாதன தர்மத்தை மோசமான நோய்களுடன் ஒப்பிடுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், சனாதன தர்மத்தை அவமதிப்பதை யாராவது பொறுத்துக்கொள்வார்களா, அரசியலில் மதத்தை இழிவுபடுத்தும் காங்கிரசின் சதி எந்த வகையிலும் தொடர அனுமதிக்க முடியாது என்றும், பிரதமர் மோடியின் தலைமையில் உலகம் முழுவதும் சனாதன மரபுகளை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.







