தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடந்த நிலையில், திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவியேற்பு விழா மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்ச் 4ம் தேதி நடக்க உள்ள மறைமுக தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேவகோட்டை நகராட்சியின் 15 அதிமுக கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி முன்ஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மறைமுக தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம் என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.








