முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

”மீண்டும் தங்கப் பறவையாக ஜொலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை”


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

வளம் கொழிக்கும் நாடாக இருந்தபோது இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி வெளியேறும்போது இந்தியாவை வறுமை நாடாக ஆக்கிவைத்திருந்தார்கள். 1700களில் உலகின் பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கை இந்திய பொருளாதாரம் கொண்டிருந்ததது.  அத்தகைய பணக்கார நாடாக விளங்கிய இந்தியாவில் ஆண்டு தனிநபர் சராசரி வருமானத்தை 249 ரூபாய் அளவிற்கு கொண்டு வந்திருந்தது ஆங்கிலேயர் ஆட்சி.

1765ம் ஆண்டுக்கும் 1938ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவிடமிருந்து பறித்த செல்வ வளங்களின் மதிப்பு 45 லட்சம் கோடி டாலர் என  அதவாது இந்திய மதிப்பு படி 3,586 லட்சம் கோடி ரூபாய் என உத்சா பட்நாயக் என்கிற பொருளாதார அறிஞர் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்ததால் இந்தியாவை உலகின் ”தங்கப் பறவை” என்றே  அழைத்தார்கள் பொருளாதார அறிஞர்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரட்டீஷ் ஏகாதிபத்யத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பின் சுதந்திர இந்தியா தனது வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடங்கியபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்தான். அது கடந்த 75 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்து சுமார் 300 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு இந்தியா மேற்கொண்ட பல்வேறு முக்கிய முடிவுகளும், தொழில் புரட்சி, பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, நீலப் புரட்சி ஆகியவையும் காரணம்.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியையும் சர்வதேச அரங்கில் அதன் அந்தஸ்தையும் உயர்த்த முக்கிய காரணிகளாக அமைந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

திட்டக்குழு தொடக்கம்

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தொழில் வளம், வேளாண் உற்பத்தி நசுக்கப்பட்ட நிலையில், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய 1950ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திட்டக்குழுவை உருவாக்கினார். 1951ம் ஆண்டு முதல் 5 ஆண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உணவு தானியங்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிக அளவு அந்நியச் செலாவணியை செலவிடவேண்டியிருந்ததால்,  வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நீர்ப்பாசான திட்டங்களுக்கும் முதல் 5 ஆண்டு திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1956ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாது ஐந்தாண்டு திட்டத்தில் நவீன பொருளதார கட்டமைப்புக்கும், வேகமான தொழிற்வளர்ச்சிக்கும் வித்திடப்பட்டது.

பசுமைப் புரட்சி

லால்பகதூர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட  பசுமைப் புரட்சி வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னின்று நடத்திய இந்த வேளாண் புரட்சியில் விஞ்ஞானி நார்மன் இ போர்லாக் உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்தனர். வேளாண் கருவிகள் முதல், பயிர்களின் விதைகள் வரை அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட வெண்மை  புரட்சியால் பால் உற்பத்தியில் இந்தியா மீண்டும் உலகின் முன்னணி இடத்திற்கு வந்தது.

நாட்டுடமையாக்கல்

1953ம் ஆண்டு இந்தியாவின் 9 விமான நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. இந்த வரிசையில் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக 1969ம் ஆண்டு ஜூலை 19ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மேற்கொள்ளப்பட்டது.  நாட்டின் 14 முக்கிய வங்கிகளை தனது உத்தரவால் ஒரே நாளில் நாட்டுடமையாக்கினார் இந்திராகாந்தி. நாட்டின் பொருளாதாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இதுவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

தாராளமயமாக்கல்

1991ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொள்ளப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்த நடவடிக்கை முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 2000ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் தாராளமயமாக்கல் கொள்கை மேலும் விரிவுபடுத்தப்பட்டு அந்நிய முதலீடுகள் மேலும் ஈர்க்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

டிஆர்டிஓ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 5 ஆயிரம் விஞ்ஞானிகள், 25 ஆயிரம் ஊழியர்கள் உள்பட 30 ஆயிரம் பேருடன் செயல்படும் டிஆர்டிஓக்கு நாடு முழுவதும் 58 ஆய்வகங்கள் உள்ளன. பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறைசாற்றுவதில் டிஆர்டிஓவுக்கு முக்கிய பங்கு உண்டு. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் டிஆர்டிஓவின் தலைவராக இருந்தபோது ஏவுகணை உருவாக்கத்தில் பல்வேறு முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

விண்வெளியில் ஆராய்ச்சியில் வியக்க வைத்த இஸ்ரோ

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாநாசாவையே மிரள வைக்கும் அளவிற்கு இந்தியா வெற்றிகளை குவிப்பதற்கு 1969ம் ஆண்டு சுதந்திரனத்தன்று அடித்தளம் போடப்பட்டது. ஆம் அன்றுதான் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடங்கப்பட்டது. இந்திய செயற்கைகோள்கள் வெளிநாட்டு ராக்கெட்டுகளில் பறந்த காலத்தை மாற்றி வெளிநாட்டு செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்படும் நிலையை உருவாக்கியது இஸ்ரோ. இதுவரை 34 வெளிநாடுகளைச் சேர்ந்த 345 செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ள இஸ்ரோ, அதன் மூலம் நாட்டிற்கு 279 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,220 கோடி ரூபாய்) அளவிற்கு அந்நியச் செலவாவணியை ஈட்டித் தந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக மங்கள்யான் விண்கலத்தை செலுத்தி வல்லரசு நாடுகளை வியக்க வைத்தது இஸ்ரோ

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை 75 ஆண்டுகால இந்திய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கறுப்பு பணத்தை ஒழிப்பதில் பணமதிப்பிழப்பு முக்கிய நடவடிக்கையாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடினாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தனர்.

ஜிஎஸ்டி 

நாட்டின் வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், நாட்டின் முக்கிய பொருளதார நடவடிக்கைகளில் ஜிஎஸ்டி அறிமுகம் கருதப்படுகிறது.

ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டபின்னடைவுகளை படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகளின் மூலம்  75 ஆண்டுகளில் கடந்து வந்துள்ளது இந்தியா.  பொருளாதார வல்லமையில் இந்தியா மீண்டும் உலகின் தங்கப் பறவையாக ஜொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதை ஆசாமியை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்தி குத்து

G SaravanaKumar

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Halley Karthik

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் – மத்திய அரசு முடிவு

G SaravanaKumar