இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3,500 ட்ரோன்களை கொண்டு வானில் பறக்கவிடும் Beating Retreat எனப்படும் ராணுவ வீரர்களின் வீறு நடை கண்காட்சி ஜனவரி 29-ஆம் தேதி மாலை ரைசினா ஹில்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு 1,000 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில், இந்தாண்டு அதை மும்மடங்காக உயர்த்தியுள்ளனர்.
நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா நடைபெற்றது.
முன்னதாக பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல்சிசி கலந்துகொண்டுள்ளார். “எகிப்து அரபுக் குடியரசின் குடியரசுத் தலைவர் நமது குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை” என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக ஜனவரி 23 முதல் 31 வரை கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த வகையில் ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளில் பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் இந்த கொண்டாட்டங்கள் தொடங்கி மகாத்மா காந்தியின் நினைவு தினம் (ஜனவரி 30) வரை நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக ஜனவரி 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விஜய் சவுக் பகுதியில் Beating Retreat எனப்படும் ராணுவ வீரர்களின் வீறு நடை நிகழ்வு நடைபெறும். 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் இந்த கொண்டாட்டங்கள் பெரிய அளவில் நடத்தப்படாத நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு 1,000 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டு கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டும் டெல்லி நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் 3,500 ட்ரோன்களை கொண்டு வானில் பறக்கவிடும் Beating Retreat எனப்படும் ராணுவ வீரர்களின் வீறு நடை கண்காட்சியை 3D ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 29 அன்று நடத்தப்பட உள்ள “இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் ஷோ” என்றழைக்கப்படும் Beating Retreat விழாவில், “3,500 உள்நாட்டு ஆளில்லா விமானங்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் ஷோ, ரைசினா மலையின் மீது மாலை வானத்தை ஒளிரச் செய்ய உள்ளது. மேலும் மென்மையான ஒத்திசைவு மூலம் எண்ணற்ற தேசிய உருவங்கள் மற்றும் நிகழ்வுகளை தடையின்றி வழங்க உள்ளது. இதற்கான ஒத்திகைகளும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.
‘Beating Retreat’ என்றால் என்ன? அது எப்போது உருவானது ?
‘Beating Retreat’ என்பதற்கு பின்வாங்கு முரசறை என்ற இன்னொரு பெயரும் உண்டு. இது இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாட்டங்களின் அலுவல்முறையின் முடிவுறலாக கடைபிடிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவரின் மாளிகை அருகே ரைய்சினா ஹில்சில் அமைந்துள்ள விஜய் சவுக்கத்தில் ஜனவரி 29 மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெறும். இதன் முதன்மை விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் இருப்பார். குதிரை அணிவகுப்பினூடே குடியரசுத்தலைவர் வருகை புரிவார். அப்போது அவருக்கு பேண்டுகள் வாசித்து அணிவகுப்பு மரியாதையை கொடுக்கப்படும். அதை ஏற்றுக்கொண்ட பின்னர் தேசிய வணக்கம் செலுத்தப்பட்டு நாட்டுப்பண்ணுடன் தேசியக் கொடி ஏற்றப்படும் .
இதனையடுத்து இந்தியப் படைத்துறையின் மூன்று அங்கங்களான இந்தியத் தரைப்படை, இந்தியக் கடற்படை, இந்திய வான்படையின் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதில் தரைப்படை, வான்படை, கடற்படையின் முரசறைவோர், ஊதுகுழல் கலைஞர்கள், என கலைஞர்கள் வரிசையாக தங்கள் திறமையை காட்டிய வண்ணம் அணிவகுப்பர். ஒவ்வொரு குழுவினரின் சார்பாக நடத்தப்படும் நிகழ்வுகளும் காண்பதற்கு இனிமையாகவும், நம் கண்களுக்கு விருந்தாகவும் இருக்கும்.
இந்த நிகழ்வானது 1950-இல் இந்தியப் படைத்துறையின் வெவ்வேறு பிரிவுகளின் முரசறை இசைக்குழுக்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் மேஜர் இராபர்ட்சால் வடிவமைக்கப்பட்டது. துவக்கத்தில் இது கடிகாரம் அமைத்தல் என்று அழைக்கப்பட்டு, மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது இதற்கான மாலைத் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டை சுடுவதாக இருந்தது.
பிறகு ஜூன் 18, 1690- இல் இரண்டாம் ஜேம்ஸ் என்பவரின் ஆணைப்படி தங்கள் படைகளை பின்வாங்க முரசறையப்பட்டன. பின்னர் 1694-இல் வில்லியம் இட்ட ஆணைப்படி இது படைத்துறைகான ஒன்றாக மட்டுமே மாற்றப்பட்டது. இறுதியாக பின்வாங்கலுக்கான எக்காள இசை எழுப்பப்படும்.இதனைத் தொடர்ந்து கொடிகள் ஒவ்வொன்றாக கீழிறக்கப்படும். பின்னர் பேண்டு மாஸ்டர் தமது இசைக்குழுக்கள் கலைந்து செல்ல குடியரசுத் தலைவரின் அனுமதிக் கோருவார். பின்னர் அனுமதி பெற்று குடியரசுநாள் சடங்குகள் முடிந்ததாக அறிவிப்பார்.
இதனைத் தொடர்ந்து இசைக்குழுக்கள் பாடல்களை வாசித்தபடியே கலைந்து செல்லும். தரைப்படை வழமையாக சாரே சகாங் சே அச்சா என்ற பாடலை வாசிக்கிக்கும். அந்த சமயம் ரைய்சினா குன்றைக் கடந்ததும் தலைமைச் செயலகத்தின் வடக்கு,தெற்கு வளாகக் கட்டிடங்கள் ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருப்பதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் . பிறகு இந்திய படைகள் வந்திறங்க, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு தேசிய கொடி இறக்கப்படும். இதனையடுத்து குடியரசுத் தலைவர் தமது இல்லத்திற்குத் திரும்புவார்.
1950 ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை நடத்தப்படும் இந்தச் சடங்கானது இதுவரை இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக குஜராத்தில் 2001-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கப் பேரிடரால் நிறுத்தப்பட்டது. பின்னர் 2009-ஆம் ஆண்டு , ஜனவரி 27-ல், முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மறைந்ததை அடுத்து அந்தாண்டும் இச்சடங்கு நடைபெறவில்லை.
- பி. ஜேம்ஸ் லிசா


















