ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த விருதை இந்தியர்கள் கொண்டாட வேண்டும் – நியூஸ் 7 தமிழுக்கு வைரமுத்து பிரத்யேக பேட்டி!

ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த விருதை இந்தியர்கள் கொண்டாட வேண்டும் என நியூஸ் 7 தமிழுக்கு வைரமுத்து அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற  நாட்டு  கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை…

ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த விருதை இந்தியர்கள் கொண்டாட வேண்டும் என நியூஸ் 7 தமிழுக்கு வைரமுத்து அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற  நாட்டு  கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து  நியூஸ் 7 தமிழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..

” நாட்டுக் கூத்து பாடலுக்கு கிடைத்தது ராஜமௌலியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. கீரவாணியின் இசைஞானத்திற்கு கிடைத்த வெற்றி. சந்திரபோஸ் அவர்களின் பாடலின் வரிகளுக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆடிய நெருப்பு நடனத்திற்கு ,உடல் மொழிக்கு கிடைத்த வெற்றி. பாடிய பாடகர்கள் ,பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி.

ஒரு பாட்டின் வெற்றி என்பது கூட்டு வெற்றி தனிநபர் வெற்றி அல்ல. இசையமைப்பாளரின் கற்பனைக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடலாம். இந்தப் பாடலின் இசை பன்னாட்டுக்கும் ரசனை படைத்த  இசையாகவும் ,  தென்னாட்டு இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இதைப் பார்க்கிறோம். ‘தெலுங்கு மொழி நமது சகோதர மொழி அதன் வெற்றி நம் தாய் மொழிக்கு கிடைத்த வெற்றி’. இந்த வெற்றியை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்

மேலும் மதன் கார்க்கியை எப்போதும் நான் பாராட்டி சொன்னதில்லை. ஆனால் தற்போது அவரை பாராட்டி சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மதன் கார்க்கி ஆர்ஆர்ஆர் படத்திற்கு தமிழ் மொழியில் பங்களிப்பு அளித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அப்படத்தில்  வசனங்களையும் பாடல்களையும் அவர் எழுதி இருக்கிறார். என்னை அழைத்து தனி காட்சி போட்டு காட்டினார்.

அவரிடம்  உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் அபாரமானது.  இந்த முயற்சிக்கு  ஆஸ்கர் விருது  கிடைக்கும் என்றெல்லாம் நான் வாழ்த்தவில்லை. கிடைக்கும் என்றுகூட நான்  எதிர்பார்க்கவில்லை.  நல்ல உழைப்பு எங்கிருந்தாலும் அதனை உலகம் கொண்டாடும் அப்படிதான் இந்த ஆர் ஆர் ஆர் படத்தின் பாடலை  உலகமே கொண்டாடியது.

அவரின் தமிழ்மொழி பங்களிப்பிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜமௌலி என்ற சொல்லுக்கு கிரீடம் என்பது பொருள். அப்படிதான் ராஜமௌலிக்கு ஒரு கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. ராஜமௌலிக்கு கீரவாணிக்கம் சூட்டப்பட்ட இந்த மகுடத்தை ஒவ்வொரு இந்தியனும் தங்களது தலையில் சூடிக்கொள்ளலாம்.” என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

வைரமுத்து குறித்த முழு பேட்டியை காண..

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.