ஆஸி.க்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.…

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.

நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்ங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி  19.2 ஓவரில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய மகளிர் அணி சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா மகளிர் அணியினர் ரன் குவிப்பதற்கு திணறினர்.

இதையும் படியுங்கள் : திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை சீரமைப்பு! நாளை சோதனை ஓட்டம்!

மேலும், நான்கு பேர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். ஒரு நாள் தொடரில் ஆட்ட நாயகி விருது வென்ற ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக எலிசா பெர்ரி 37 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் பந்து வீச்சாளர்களில் அற்புதமாக பந்து வீசிய டைடஸ் சாது வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷ்ரேயங்கா பாடீல், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 142 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 14 பந்துகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்திய மகளிர் ஓபனர்கள் இருவரும் அரைசதமடித்தனர்.  ஸ்மிரிதி மந்தனா 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மேலும், ஷெபாலி வர்மா 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பவுலிங் செய்த டைடஸ் சாது ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.