தென்னாப்பிரிக்காவை வென்று தொடரை சமன் செய்யுமா இந்திய மகளிர் அணி?

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க மகளிர்…

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க மகளிர் அணி பெங்களூருவில் விளையாடிய ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து ஒயிட்வாஷ் ஆனது.  அடுத்து சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சென்னையில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலைப வகிக்க, நேற்று முன்தினம் நடந்த 2வது டி20ல் இந்தியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது.

அடுத்து இந்தியா துரத்தலை தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் ரத்தானது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 இன்று நடைபெறுகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடரில் மண்ணைக் கவ்வினாலும், டி20ல் தென் ஆப்ரிக்கா சிறப்பாகவே விளையாடி வருகிறது. பிரிட்ஸ் தொடர்ந்து 2 அரைசதம் விளாசி உள்ளார். லாரா, மரிஸன்னே, டி கிளெர்க், போஷ் நல்ல பார்மில் உள்ளனர்.

அதே சமயம் டெஸ்ட், ஒருநாள் தொடரில் ஹர்மன்பிரீத் & கோ காட்டிய வேகம் டி20 தொடரில் மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். 2-0 என தொடரை கைப்பற்ற தென் ஆப்ரிக்காவும், 1-1 என டிரா செய்ய இந்தியாவும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.