இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி நேற்று தொடங்கியது. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின.
விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது. நட்சத்திர வீரர்கள் ஷமி, பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்களை குவித்தது. இஷன் கிஷான் 87 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர். 200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய அணி இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அசலங்கா மட்டும் அரைசதம் கடந்தார்.
இறுதியில் இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே எடுக்கமுடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.








