உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி உறுதி!

10 ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் மத்திய அரசு…

10 ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை இந்தியா முழுவதும் மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் கீழ் மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :

இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள். இன்று பணி நியமனக் கடிதம் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில் இவர்களை ‘நாட்டை பாதுகாப்பவர்கள்’ என்று கூறலாம்.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை வாங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. இது உற்பத்தியை அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். இந்த உத்தரவாதத்தை அளிக்கும் போது, அதை முழுப்பொறுப்புடன் செய்வேன்.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறை ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் பங்களிக்கும், இளைஞர்களுக்கு 13-14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.