மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்

உலகின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசு தினமான நேற்று இந்த மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…

உலகின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசு தினமான நேற்று இந்த மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக பாரத் பயோடெக் நிறுவனமும் பொதுத்துறை நிறுவனமான உயிரிதொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி மையமும் இணைந்து மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

’இன்கோவாக்’ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மருந்தை  மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், “இன்வோவாக் மருந்து இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு திறனை காண்பிக்கிறது. உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தாக இன்வோவாக் உள்ளது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டதுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இன்வோவாக் மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு  இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகம் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து தனியார் சந்தையில் 800 ரூபாய்க்கும், மத்திய மற்றும் மாநில அரசுக்கு 325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.