”இந்தியா தான் எங்கள் குடும்பம்!” – உத்தவ் தாக்கரே; ”இந்தியாவை விற்க பாஜக துடிக்கிறது!” – மம்தா பேனர்ஜி

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சிகள் நாட்டை காக்கவே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறினர்.  நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன்…

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சிகள் நாட்டை காக்கவே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறினர். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் அனைத்து கட்சித்தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

அனைத்து மாநில மக்களின் உயிரும் ஆபத்தில் உள்ளது; பாஜக ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இல்லை; நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டும்; இதற்காக கருத்து வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் இணைந்துள்ளோம்; எங்களது இந்த முயற்சி வெற்றி பெறும், அதற்கான முதற்படி பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியால் INDIA கூட்டணியை எதிர்கொள்ள முடியுமா? ஒவ்வொரு வார்த்தையிலும் இந்தியாவை விற்க பாஜக துடிக்கிறது. இந்தியாவை பாதுகாக்க INDIA-வால் தான் முடியும். இவ்வாறு மம்தா பேனர்ஜி கூறினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

இந்த கூட்டணி வென்றால் மக்களிடையே அன்பு மலரும், வளர்ச்சி பெருகும்; ஒரு குடும்பத்திற்காக ஒன்றிணைவதாக கூறுகிறார்கள், இந்தியா தான் எங்கள் குடும்பம். அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவே மோடி செயல்படுகிறார்; பல்வேறு கருத்துகளை கொண்டவர்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளோம் இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.