”தீவிரவாத அமைப்புகளின் பெயரில் கூட INDIA உள்ளது“ – எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

”தீவிரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது “  என எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச்…

”தீவிரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது “  என எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20) மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதே போல் அடுத்த நாளும் இதே விவகாரம் எழுப்பப்பட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் நோட்டீஸ் அளித்திருந்தன. ஆனால் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது..

”எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சிகள் கூட்டணி நெடுநாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது.

இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது. எனவே குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை.

அதே வேளையில் நாம் இன்னும் ஒரு ஆண்டில் நடப்பு ஆட்சியை பூர்த்தி செய்யவுள்ளோம். எனவே மீண்டும் நாம் புத்துணர்வுடன் எழுச்சியுடன் செயல்பட்டு அடுத்த தேர்தலை சந்திக்க நம்மை கட்டமைக்க வேண்டும் “ என பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.