“இலக்கை எட்டும் வரை போராடு, போராடாமல் எதுவும் கிடைக்காது” இப்படி, போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர்தான், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி.
பெண்கள் மருத்துவத் தொழிலில் சாதிக்க, நூற்றாண்டு கால தடைகளைத் தகர்த்து, சுதந்திர வாசலை திறந்துவைத்த மருத்துவர் முத்துலட்சுமி, பிறந்து இன்றுடன் 135-ஆண்டுகள் ஆகின்றன. புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில், முதல்வராக பணியாற்றி வந்த நாராயணசாமிக்கும், பாடகி சந்திரம்மாளுக்கும் மகளாக பிறந்தவர் முத்துலட்சுமி. சிறுவயதில் இருந்தே, பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில், முத்துலட்சுமி தொடர்ந்து படிக்க அவருடைய குடும்பம் முக்கிய காரணமாக இருந்தது. 1902-ல் புதுக்கோட்டை அளவிலான, மெட்ரிக் தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களில் ஒரே பெண்ணாக மிளிர்ந்தார் முத்துலட்சுமி.

இன்றைக்கும் 50 சதவீத பெண் குழந்தைகளால், உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிக்கல்வி முடித்து, கல்லூரியில் சேர துடித்த முத்துலட்சுமி, சந்தித்த சோதனைகள் சொல்லிமாளாது. முற்போக்கு சிந்தனைக் கொண்ட, புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட வைரவத் தொண்டைமான், தலையீட்டின் விளைவாக சில கட்டுப்பாடுகளுடன், கல்லூரியில் சேர அனுமதிக்கப்பட்டார் முத்துலட்சுமி. ஆண் மாணவர்கள் சூழ்ந்த வகுப்பில், மூன்று பக்கமும் திரை அமைத்து, உட்கார வைக்கப்பட்டார் அவர்.
தொடர்ந்து 1907-ல், ‘சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். தன்னுடைய வகுப்பில் மாணவிகள் வருகையை விரும்பாத கர்னல் ஜிப் போர்டுதான் முத்துலட்சுமியின் பேராசிரியர். அறுவை சிகிச்சைப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றால் தான், தன் வகுப்பில் அனுமதிக்க முடியும் என கர்னல் ஜிப் போர்டு, விதித்த நிபந்தனையை சாதித்து காட்டினார் முத்துலட்சுமி. 1912ம் ஆண்டு, மருத்துவர் பட்டம் பெற்ற, முதல் இந்தியப் பெண் என்கிற அடைமொழியுடன், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமி பட்டம் பெற்றபோது, சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றில், இது பொன்னான நாள் என எழுதினார், கர்னல் ஜிப் போர்டு. முத்துலட்சுமி மருத்துவரான பிறகு, இந்திய மாதர் சங்கம் சார்பில் சென்னை அடையாறில் புற்றுநோய் மையத்தை நிறுவினார். அதுவே ஆலமரமாய் வளர்ந்து ஆயிரமாயிரம் நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.
மருத்துவராக சமூகத்தில் நன்மதிப்பை பெற்றிருந்த முத்துலட்சுமி, நாட்டிலேயே சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட, இரண்டாம் பெண் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெண்களுக்கான சமூக சீர்திருத்தச் சட்டங்களை இயற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.
குறிப்பாக ‘தேவதாசி முறை ஒழிப்பு மசோதா’, ‘குழந்தைத் திருமணத் தடை மசோதா’ போன்றவை அவருடைய முக்கிய பங்களிப்புகள் தான். சமூகத்தை அனைத்துப் பெண்களுக்குமானதாக, மாற்றுவதற்காகக் கடைசிவரை மன உறுதியுடன் போராடிய டாக்டர் முத்துலட்சுமி, இன்றும் பல பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.








