தெற்காசிய கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி 9 வது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் 14-து தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. 8 அணிகள் கலந்துகொண்ட நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான், குவைத், வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் குவைத் 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – குவைத் அணிகள்
மோதின. சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் அதிரடி காட்டினர்.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டியை சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 5க்கு 4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி 9 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.



