கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில், காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதே இல்லை. குறிப்பாக வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் காவல் நிலையங்களில் பெண்கள் தொடர்பான ஏதாவது ஒரு குற்ற சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதியப்பட்டு கொண்டு தான் வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மாநில அளவில் ஆய்வு நடத்தினால் உத்திரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பு ஒன்று சொல்கிறது. அதே வரிசையில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை, மீட்புப்பணிகள் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, காவல்துறை சார்பில் கொள்கை விளக்க குறிப்பு வழங்கப்பட்டது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 442 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை மரணம் தொடர்பாக 27 வழக்குகளும், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் பெண்களுக்கு கொடுமை என்று 875 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானபங்கம் செய்ததாக 1,077 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தமாக 4 ஆயிரத்து 469 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பதிவாகி உள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: