கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு நாட்களெயான நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் மூத்த சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது இம்ரான் கான் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அவரது மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த பாதுகாப்பிற்கான மாநாடு ஒன்றில் இம்ரான் கான் முக கவசம் அணியாமல் கலந்துகொண்டுள்ளதாகவும், இந்த மாநாட்டில் பலர் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழனன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஆசாத் உமர் கூறுகையில், ” உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவக்கூடியது மற்றும் மிக ஆபத்தானது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாகவும், மக்கள் புதிய சட்டதிட்டங்களைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement: