சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின், நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து மூத்த அமைச்சர்கள் பலர், அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைநட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே! நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். ’ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பதற்கு ஏற்ப, நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது உங்கள் தாயாருக்கு தான் அளவற்ற மகிழ்ச்சியை தரும்.
நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஏற்கனவே களமிறங்கிவிட்டீர்கள். அரசியலுக்கும் வந்துவிட்டீர்கள். அமைச்சரான பின்னர் பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே நீங்கள் இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.








