பேன் இந்தியா படங்களை தொடங்கி வைத்த இசை ராஜாவும், காட்சிமொழி காதலனும்; இளையராஜா – மணிரத்னம் பிறந்தநாள் ஸ்பெஷல்!…

1943 ஜூன் 2ம் தேதி, அன்றைய மதுரை மாவட்டம் பண்ணைபுரத்தில் ஒரு ஏழைத்தாய்க்கு பிறந்த குழந்தையின் அழுகை, ராகம் பாடியது போல தேனிசை கீதமாய் ஒலித்தது. அன்றிலிருந்து, சரியாக 13 ஆண்டுகள் கழித்து 1956ல்,…

1943 ஜூன் 2ம் தேதி, அன்றைய மதுரை மாவட்டம் பண்ணைபுரத்தில் ஒரு ஏழைத்தாய்க்கு பிறந்த குழந்தையின் அழுகை, ராகம் பாடியது போல தேனிசை கீதமாய் ஒலித்தது. அன்றிலிருந்து, சரியாக 13 ஆண்டுகள் கழித்து 1956ல், அதே ஜூன் 2ம் தேதி, அதே மதுரையில் சற்றே வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த குழந்தையோ, தனது கண்களை அகல திறந்து, ஒளியை பற்றிக் கொண்டு, காணும் காட்சியையெல்லாம் அழகியல் மொழியாய் புரிந்து கொள்ள தொடங்கியது. நாட்கள் செல்லச்செல்ல, இசையை பற்றிய குழந்தைக்கு இசையே வாழ்க்கையாக, காட்சியை ரசிக்க ஆரம்பித்த குழந்தைக்கு காட்சி மொழியே ஜீவனானது. ஒளியும் ஒலியும் இணைந்தால் தானே சினிமா. அப்படி, பண்ணைபுரத்தில் பிறந்த அந்த பிரகாச ஒளியும், இன்னிசையும் இணைந்த போதுதான் தமிழ் சினிமா அடுத்தக் கட்டத்திற்கேச் சென்றது. அந்த இருவர் தான், ஜூன் 2ல் பிறந்தநாள் கொண்டாடும், இசைஞானி இளையராஜாவும், இயக்குநர் மணிரத்னமும்.


தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இசைப்பயணம் 1976ம் ஆண்டே தொடங்கிவிட்டது. சிவகுமார், சுஜாதா நடிப்பில், இயக்குநர் தேவராஜ் மோகன், பஞ்சு அருணாசலம் கூட்டணியில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்று தயாரானது. அந்த படத்தின் வசனகர்த்தா செல்வராஜ், படத்திற்கு தனது நண்பர் ராசைய்யா இசையமைத்தால் சரியாக இருக்கும் என எண்ணி, பஞ்சு அருணாசலத்திடம் பரிந்துரைத்தார். அவரும் ராசைய்யாவையே வைத்தே இசையமைப்பது என்கிற முடிவுக்கு வந்தார். எம்.எஸ்வி, சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டுக் கொண்டிருந்த நேரத்தில், ராசைய்யா என்ற புதுப் பையனை இசையமைக்க வைக்க பஞ்சு அருணாசலம் முடிவு செய்தது, தமிழ் சினிமாவில் பலருக்கும் வியப்பாக இருந்தது. ஏன்..? பலர் விஷப்பரீட்சை என்றே பேசினர். “புது பையன் நமக்கு வேணாம், ஆள பார்த்தா ஒழுங்கா மியூசிக் போடற ஆளா தெரியலயே.., எதுக்கு வீண் முயற்சியில இறங்கிட்டு, வேற ஆள பார்க்கலாம்” என்றனர் பஞ்சு அருணாசலத்தின் நண்பர்கள். இருந்தாலும், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்பதனால், ராசைய்யாவை வைத்தே இசையமைப்பது என்கிற முடிவுக்கு வந்தார் அருணாசலம்.


பஞ்சு அருணாசலம் தனது படத்துக்கு முதலில் ’மருத்துவச்சி’ என்றே தலைப்பு வைத்திருந்தர். பின்னர், “சூடிக் கொடுத்தாள்” என மாற்றியிருக்கின்றனர். படத்தின் கதையை கேட்ட ராசைய்யா, படத்தின் முதல் பாடலுக்காக தனது ஆர்மோனிய பெட்டியை எடுத்து, ”அன்னக்கிளி உன்ன தேடுது” என ராகம் பாடினார். ’இது நல்லா இருக்கே’ என அந்த வரிகள் பஞ்சு அருணாசலத்திற்கு பிடித்துப்போகவே, படத்திற்கு ‘அன்னக்கிளி’ என்றே பெயரிட்டிருக்கின்றனர். அந்த ட்யூனும் வரிகளும் பிடித்துப்போக, முதல் பாடலுக்கான ரெக்கார்டிங் பணிகளும் ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. அந்தப்பாடலை லதா மங்கேஷ்கரை வைத்து எடுக்க விரும்பியுள்ளனர். ஆனால், அவரால் முடியாமல் போனதால், பின்னர் ஜானகியை பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். பாடல் பதிவு ஆரம்பித்தது. ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்த போதே, மின்வெட்டு ஏற்பட்டது. ‘நல்ல சகுணம்’ என்று அங்கிருந்த பலர் முனுமுனுத்தனர்.

முதல் பாடல் பதிவே இது போன்ற தடங்களை சந்தித்ததால், ’அபசகுணம்’ என்று ராசைய்யாவின் காதுபடவே பலரும் பேசத் தொடங்கினர். இதனால், மனமுடைந்து போனார் ராசைய்யா. “சினிமாவில் இதெல்லாம் சகஜம். தைரியமா உன்னோட வேலையை செய்து முடி” என அவரை தேற்றியிருக்கின்றனர் அங்கிருந்தவர்கள். ரெக்கார்டிங்கிலும் சில பிரச்னைகள் ஏற்பட, அதையும் எப்படியோ சமாளித்து, தனது முதல் பாடலை ஒருவழியாக ரெக்கார்ட் செய்து முடித்ததாக தெரிவித்தார் ராசைய்யா. இதன்பிறகே ராசைய்யா இளையராஜாவானார்.

ஒருவழியாக பிற பாடல் பதிவு பணிகளும் முடித்து பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட் அடித்தன. படமும் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை யாரும் கேட்டிருக்காத வகையில் புதுமையான இசையாகவும், நகரம் முதல் கிராமங்கள் வரையில் அனைவரையும் கவரும் இசையாகவும் அது இருந்தது. எங்கு பார்த்தாலும், ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ பாடலையே பலரும் முனகத் தொடங்கினர்.

“மச்சான பாத்தீங்களா..?” பாடலில் அதுவரை அபசகுணமாகக் கருதப்பட்ட பறை இசையை, முதன்முதலாக பயன்படுத்தி புரட்சி கண்டார் இளையராஜா.

ஆர்.டி.பர்மன், நௌஷத் அலி, லதா மங்கேஷ்கர் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்களையும் பாடகர்களையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தன அன்னக்கிளியின் பாடல்கள். இதுவே ராசைய்யா என்ற இடதுசாரி கொள்கைக் கொண்ட குடும்பத்தின் வாரிசை, இளையராஜாவாக தமிழ்சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தியது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இளையராஜா வீட்டின் வாசலில் குவியத் தொடங்கினர். 16 வயதினிலே, முள்ளும் மலரும், சிவப்பு ரோஜாக்கள், ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாணராமன், உதிரிப்பூக்கள், ஜானி, மூடு பனி, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை என 1976 முதல் 1983 வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் இசைஞானி இளையராஜா.

‘இளையராஜாவின் ரசிகை’ என ஒரு படத்திற்கு தலைப்பு வைக்கும் அளவிற்கு அவரது புகழும் இசையும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி இருபுறம் சங்கீத சாம்ராட்டாய் இளையராஜா வளர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் இயக்குநர் கனவை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க தொடங்கியிருந்தார் மணிரத்னம். இரண்டு சகோதரர்கள், சகோதரி, உற்றார் உறவினர் என கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவர் மணிரத்னம். தந்தை எஸ்.கோபாலரத்னம் திரைப்பட விநியோகஸ்தராக, உறவினர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி சினிமா தயாரிப்பாளராக இருந்தாலும், படம் பார்க்கும் பழக்கத்திலிருந்து மணிரத்னம் அவரது குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்டார்.

இருந்தாலும், வீனஸ் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்ட, உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, பட்டனத்தில் பூதம் போன்ற படங்களுக்கான வேலைகள் அவரது வீட்டிலும் நடைபெற்றதால், சினிமா அறிமுகம் மணிரத்னத்திற்கு எளிதாக கிடைத்தது. அப்போதும், மணிரத்னம் திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்ப்பத்தை அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவே இல்லை. பெரும்பாலும் பட ஷூட்டிங்கிற்கு தான் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு படப்பிடிப்பு தளங்களுக்குச் செல்வது பிடிக்கவில்லை. காரணம், retake என்ற பெயரில் ஒரே ஷாட் மீண்டும், மீண்டும் எடுக்கப்பட்டது சலிப்பை அளித்ததுதான். ஷூட்டிங் பார்க்கவே பிடிக்காத மணிரத்னம், பின்னாளில் பெரிய இயக்குநர் ஆனதே விந்தையான வரலாறு.


1977ல், கல்லூரி படிப்பை முடித்திருந்த காலத்திலும் குறைந்தளவிலான படங்களை மட்டுமே பார்த்திருந்தார் மணிரத்னம். அதில் சிலப்படங்களை ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து பார்த்த கதையும் உண்டு. எம்.பி.ஏ பட்டதாரியாக இருந்தாலும், consultancy தொடர்பான வேலைக்கு செல்ல மணிரத்னத்திற்கு துளியும் விருப்பம் இல்லை. அப்போது தான், பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகனும், மணிரத்னத்தின் நண்பருமான ரவி சங்கர், கன்னடத்தில் ’பங்கருதா கனி’ என்ற படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியைத் தொடங்கினார். அதற்கு மணிரத்னமும் உதவி செய்தார். அது தான் ஒரு சினிமாவிற்காக மணிரத்னம் உழைக்க தொடங்கிய முதல்படி…

அந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி முதற்கட்ட படபிடிப்பும் நடைபெற்று முடிந்தது. அதில் மணிரத்னமும் பங்காற்றினார். இருப்பினும் சில காரணங்களால், படபிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால், அங்கிருந்துதான் மணிரத்னத்தின் இயக்குநர் பயணம் தொடங்கியது. வாழ்க்கையில் என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்த மணிரத்தினம், சினிமாவில் நுழைந்து சிறந்த இயக்குநராக வேண்டும் என்பதை லட்சியமாக்கிக் கொண்டார். கார்பரேட் நிறுவன வேலையை விட்டுவிட்டு இயக்குநர் ஆவதற்கான வேலைகளில் முழுமூச்சுடன் இறங்கினார்.

scene, அரங்க அமைப்பு, திரைக்கதை, வசன நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டதால், 1980ல் தானே ஒரு கதையை எழுதத்தொடங்கினார். அந்த கதையை தொடங்கிய போது, அதனை முடித்து, வேறொரு இயக்குநருக்கு விற்றுவிட்டு அவர் அருகில் இருந்தே இயக்குநர் பயிற்சி பெற நினைத்தார். ஆனால், கதையை எழுதி முடித்ததும் மனம் மாறி, அந்த கதையை தானே இயக்குவது என்று முடிவு செய்தார். அப்போது, அவரது நண்பரான நடிகர் கிட்டி என அழைக்கப்படும் ராஜா கிருஷ்ணமூர்த்தி சோழா விடுதியில் பணியாற்றி கொண்டிருந்தார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் நெருக்கம் என்பதால், கமலை ராஜா கிருஷ்ணமூர்த்தி சந்திக்க செல்லும் போதெல்லாம், மணிரத்னமும் உடன் செல்லுவது வழக்கமாக இருந்தது. ஒருமுறை தான் எழுதிய கதையையும் உடன் எடுத்து சென்ற மணிரத்னம், ஹீரோ கதாப்பாத்திரத்திற்காக கமல்ஹாசனிடம் கதையை கூறியுள்ளார். ஆனால், கமல்ஹாசனுக்கு, அடுத்தடுத்து 5 படங்கள் முடிவாகி இருந்ததால், அவரால் மணிரத்னத்தின் கதையில் நடிக்க முடியாமல் போனது.

இருப்பினும், கதை இயக்குநர் மகேந்திரனிடம் கூறுமாறு கமல்ஹாசன் கூற, கமலின் சகோதரர் சாருஹாசன், மணிரத்னத்தை மகேந்திரனிடம் அழைத்து சென்றார். சென்ற இடத்திலும் மணிரத்னதிடம் மகேந்திரனால் பேச முடியாமல் போனது. இயக்குநர் பாலசந்தரின் காலகேந்திரா தயாரிப்பு நிறுவனத்தை அனுக, அதனை தலைமையேற்று நடத்தும் துரை என்பவரிடம் தனது கதையை கொடுத்து, அதனை பாலச்சந்தரிடம் கொடுக்குமாறும் கூறினார். ஆனால், அது இயக்குநர் பாலசந்தரின் கைகளுக்கு சென்று சேராததால், ஒரு மாத காலம் ஆகியும் மணிரத்னத்திற்கு எந்த அழைப்பும் வரவில்லை. இறுதியாக இயக்குநர் பாரதிராஜாவை இயக்க சொல்லலாம் என்று முடிவெடுத்து, அவரது அலுவலகத்தை அனுகினார்.

அங்கே தனது கதையை ஆங்கிலம் கலந்த தமிழில் விவரித்துக் கூறினார். “நிழல்கள்” படத்தை இயக்கி கொண்டிருந்ததால் மணிரத்னத்தின் கதையை பாரதிராஜாவாலும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், ‘கதை தனக்கு மிகவும் பிடித்ததிருந்ததாகவும், கூடிய சீக்கிரம் சந்திப்போம்’ என பாரதிராஜா கூறியது மணிரத்னத்திற்கு தெம்பூட்டின. தனது பைக்கை எடுத்துக்கொண்டு, நண்பர் பி.சி.ஸ்ரீராமுடன் தயாரிப்பாளர்கள் வீடுகளுக்கெல்லாம் ஏறி இறங்கினார். தேவி ஃபிலிம்ஸின் கெளரி சங்கர், ராஜ்கண்ணு உட்பட 20க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் கதை கூறியும் எவரும் படத்தை தயாரிக்க முன் வரவில்லை. அதன்பின் மணிரத்னத்தின் நீண்டபோராட்டத்திற்கு பின்னர், அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீனஸ் பிலிம்ஸ் டி.கோவிந்தராஜன் ஆகியோர் படத்தை தயாரிக்க முன் வந்தனர். பல்லவி அனுபல்லவி என்ற தலைப்போடு, திரைப்படம் கன்னடத்திலும், தமிழிலும் bilingual படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது.


ஒளிப்பதிவாளராக புதிய முகமான பி.சி.ஸ்ரீராம் வேண்டாம் என தயாரிப்பாளர் கூறியதால், பாலு மகேந்திராவை ஒப்பந்தம் செய்தார் மணிரத்னம். அதன்பின் படத்தொகுப்பாளராக தனது பக்கத்து வீட்டுக்காரர் லெனினையும், கலை இயக்குநராக பின் வீட்டுகாரர் தோட்டா தரணி என முக்கிய technicians அனைவரையும் ஒப்பந்தம் செய்தார். படத்திற்கு இசையமைக்க யாரை ஒப்பந்தம் செய்வது என்ற பேச்சுக்கள் எழுந்தது. ஆரம்பத்தில் கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரது இசை தனது படத்திற்கு சரியானதாக இல்லை என்று மணிரத்தினத்திற்கு தோன்றியதால், பின்னர் அந்த இசையமைப்பாளர் நீக்கப்பட்டார்.

இன்னிசை பாடல்களால் இந்தியாவையே தன் வசப்படுத்திய இளையராஜா, மணிரத்னத்தையும் கவராமல் இல்லை. தனது முதல் படத்திற்கும், கதைக்கும் இளையாராஜாவின் இசையே சரியாக இருக்கும் என்று எண்ணிய மணிரத்னம், இளையராஜாவை அறிமுகப்படுத்தி வைக்குமாறு, பாலு மகேந்திராவிடம் கேட்டார். அதன்படியே ஒரு நாள் இளையராஜாவை சந்தித்து, தான் இயக்கவிருக்கும் படத்தின் கதையை கூறினார். இளையராஜாவுக்கு அந்த கதை பிடித்தும் போனது. ஆனால், அப்போது இளையராஜா உச்சத்தில் இருந்ததால், ”உங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை” என்று வருத்தம் தெரிவித்தார் மணிரத்னம். ‘பரவாயில்லை. உங்களிடம் இருப்பதை கொடுங்கள்” எனக்கூறி மணிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைக்க விருப்பம் தெரிவித்தார் ராஜா.


இளையராஜாவின் இசை மீது மணிரத்னத்திற்கு இருந்த நம்பிக்கை, மணிரத்தினத்தின் இயக்கத்தின் மீது இளையாராஜாவுக்கும் இருந்தது. சினிமாவின் மீதான காதல் என்கிற ஒற்றை புள்ளியில் இருவரும் இணைந்து, தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டதெல்லாம் அதன் பிறகு தான் நடந்தது. யாரும் கற்பனை செய்ய முடியாத காட்சி அமைப்பை எளிதாக காட்சிப்படுத்திவிடும் லாவகத்துடன் மணிரத்னமும், செவி வழி நுழைந்து உள்ளத்தை பிசையும் இசைஞானியாக இளையராஜாவும் இதன்பிறகுதான் தமிழ்சினிமா கடந்து தடம் பதித்தனர்.

அனில் கபூர் அப்போது வளர்ந்து வந்த நட்சத்திரம் என்பதால், ‘பல்லவி அனுபல்லவி” திரைப்படத்தில் இணைந்த ஒரே ஜாம்பவானாக இளையராஜாவே இருந்தார். அதுவே படத்தின் விளம்பரமாகவும் அமைந்தது. புது இயக்குநர் என ஆதிக்கம் செலுத்தாமல், போடும் டியூனை எல்லாம் எது சரிவரும், எது சரிவராது என மணிரத்னத்திடம் போட்டு காட்டி, இருவருக்கும் பிடித்த சரியான டியூன்கள் மட்டுமே படத்தில் ஒலித்தன. ”ஒரு சீன் சொன்னாலே, இளையாராஜாவிடமிருந்து ட்யூன்கள் கொட்டும்” என ஒரு பேட்டியில் நினைவுக்கூறினார் மணிரத்னம்.

திரைப்படம் வெளியாகி A centre பார்வையாளர்களை அதிகம் ஈர்த்ததோடு, கர்நாடக அரசு சார்பில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றது. அதற்கு படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என தெரிவித்தார் மணிரத்னம். இந்த கூட்டணி, அடுத்து மலையாளத்தில் இயக்கிய ‘உணரு” திரைப்படத்திலும் தொடர்ந்தது. மணிரத்னத்தின் ‘பல்லவி அனுபல்லவி” திரைப்படம் மலையாள தயாரிப்பாளர் என்.ஜி.ஜானுக்கு பிடித்துப்போகவே, தனக்கு மலையாளத்தில் ஒரு படம் இயக்கி தருமாறு கேட்டார். அப்போது, மணிரத்னம், ‘திவ்யா’ என்ற கதையைக்கூற, ”இந்த கதை இப்போது வேண்டாம், எனக்கு அரசியல் ரீதியான திரைப்படமே வேண்டும்” என தயாரிப்பாளர் கேட்க, அப்படி உருவானது தான் ‘உணரு’ திரைப்படம். தொழிற்சங்க இயக்கங்களில் உள்ள ஊழலைப் பற்றிய திரைப்படமே உணரு படத்தின் மையக்கரு. மோகன்லால், சுகுமாரன், ரத்தீஷ், சபிதா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கும் இளையராஜாவே இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

பல்லவி அனுபல்லவிக்கு பிறகு, மலையூர் மம்பட்டியான், தங்கமகன், தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், அன்புள்ள ரஜினிகாந்த், தாவணி கனவுகள், நீங்கள் கேட்டவை, தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து அதனை மெகா ஹிட் ஆக்கிக்கொண்டிருந்தார் ராஜா.

மலையாளத்தில், பின்னிலவு, ஒன்னானு நம்மால், மங்கலம் நேருன்னு, இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வந்தார். மலையாள சினிமாவுக்கு இசையமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலையாகவே இருந்தது. அப்படியாகவே, இருவரும் இணைந்த ‘உணரு’ திரைப்படம் மலையாளத்தில் பெரும் வெற்றிப்பெற்றது.


கன்னடம், மலையாளம் என சுற்றி சுழன்ற மணிரத்னத்தின் கால்கள் இறுதியாக தமிழ்நாட்டை வந்தடைந்தது. சத்யஜோதி ஃபிலிம்ஸின் டி.ஜி.தியாகராஜனும், மணிரத்னமும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். மணிரத்னத்தின் காட்சியமைப்பு தியாகராஜனுக்கு மிகவும் பிடித்துப்போக, தமிழில் ஒரு படத்தில் இணைய திட்டமிட்டனர். அப்போது அவரிடமும், ‘திவ்யா’ என்ற கதையைத்தான் கூறினார் மணிரத்னம். ஆனால், தியாகராஜன் நடிகர் சத்யராஜை வைத்து ஒரு ஆக்ஷன் படம் வேண்டும் என கேட்டதால், அப்படியாக உருவானது தான் ‘பகல் நிலவு’ திரைப்படம். தமிழ் சினிமாவில் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இணைந்து தமிழில் உருவான முதல் திரைப்படம் ’பகல் நிலவு’ தான். முரளி, ரேவதி இணைந்து நடித்திருந்த இத்திரைபடத்தின் கதாபாத்திரங்களில் யாருக்குமே ஒப்பனை இல்லாமல், வில்லன் சத்யராஜ் பாத்திரத்தை இயன்ற அளவில் இயல்பாக சித்தரிக்க முயன்ற முதல் திரைப்படமாக அமைந்திருந்தது.

அப்போது மும்பையில் பிரபலமாக இருந்த வரதராஜ முதலியாரின் தோற்றைத்தை போன்றே சத்யராஜின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இளையராஜாவின் இசையில், ‘பகல் நிலவு’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, இளையராஜாவின் இன்னிசையில் ’‘பூமாலையே தோள் சேர வா’ பாடல் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது.

இளையராஜாவின் இசையே, மணிரத்னத்தின் பகல் நிலவை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்க உதவியது. திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு, மணிரத்தினத்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது. பகல் நிலவு திரைப்படத்தை எடுக்க தொடங்கும் முன்னரே, மணிரத்தினத்திடம், தனது கதையை இயக்கித் தருமாறு தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியிருந்தார். ஆனால், பகல் நிலவு படத்தின் வேலைகளில், மணிரத்னம் மும்முறமாக இருந்ததால் கோவை தம்பியுடன் இணைய முடியாமல் போனது. பகல் நிலவை முடித்தப்பின் தயாரிப்பாளர் கோவைத்தம்பியை சந்தித்த மணிரத்தினம், அவரிடமும் ‘திவ்யா’ என்ற கதையைக்கூறி அதனை இயக்க ஆர்வம் காட்டினார். ஆனால், தனது கதையையே இயக்கி தருமாறு தயாரிப்பாளர் கேட்டதால், அரைமனதோடு அதற்கு ஒப்புக்கொண்டார் மணிரத்னம். அதுவே, மோகன், ராதா, அம்பிகா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘இதயக் கோயில்” திரைப்படம்.

இதயக்கோயில் திரைப்படத்திலும் இணைந்த மணிரத்னம், இளையராஜா கூட்டணியின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. ராஜாவின் குரலில் ‘இதயம் ஒரு கோவில், அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற பாடலில் மெய்மறந்தனர் இசை ரசிகர்கள். இளையராஜா முதல்முறையாக வரிகள் எழுதிய பாடலும் மணிரத்னம் படத்தில் வந்த இந்த பாடல் தான். இந்த வரிகளை தனது மனைவி ஜீவாவிற்கு அர்ப்பணித்தார் இளையராஜா. அதே போல, ‘நான் பாடும் மெளன ராகம்’ பாட்டின் மூலமே மணிரத்தினத்துடன் முதன்முறை கைகோர்த்தார் பாடலாசிரியர் வைரமுத்து.


4 முறை முயன்றும் எடுக்க முடியாமல் போன மணிரத்னத்தின் ‘திவ்யா’ கதை, தனது சகோதரர் ஜி.வெங்கடேஷ்வரனால் சாத்தியமானது. சுஜாதா ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு ஆரம்பத்தில் திவ்யா என தலைப்பிடப்பட்டது. ஆனால், இளையாராஜா மீது கொண்ட பற்றாலும், இதயகோவில் படத்தில் வரும் ‘நான் பாடும் மெளன ராகம்’ படத்தின் பாடல் வரியாலும், திவ்யா என்ற தலைப்பை மாற்றி, ‘மெளன ராகம்’ என வைக்கப்பட்டது. தனது கனவு கதையை இயக்குவதால், அதில் தனது நண்பர் பி.சி.ஸ்ரீராமை ஒளிப்பதிவாளர் ஆக்கியதோடு, தனது விருப்பத்திற்குரிய இசையமைப்பாளரான இளையாராஜவுடனே மீண்டும் கைகோர்த்தார் மணி. பாடல் வரிகளை வாலி எழுத, ராஜா இசையில் பாடல்கள் திரும்பிய திசையெல்லாம் வெற்றிமுரசு கொட்டின. அப்போது பிரபலமான gene kellyயின் singing in the rain பாடலை தழுவியே, ‘ஓஹோ மேகம் வந்ததோ” என்ற பாடல் இசையமைக்கப்பட்டதாக பேசப்பட்டது.

அதே திரைப்படத்தில், உருவான ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடல், 2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளியா ’சீனி கும்’ படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. தமிழில் உருவான பாடல்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு, ஹிட் அடித்தன. ‘மெளன ராகம்’ திரைப்படம் ஹிட் அடித்ததோடு, மணிரத்னத்திற்கு முன்னணி இயக்குநர் அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது. மணிரத்னம், இளையராஜா இணைந்தாலே அது ஹிட்தான் என்னும் அளவுக்கு வெற்றிகள் குவிந்தன. 1987ல் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படமே, இளையராஜாவின் 400வது படமாக அமைந்தது. அந்த படத்தில், ’நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலை தானே எழுதி பாடினார் இளையராஜா.

படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே” பாடலை கேட்கும்போதே கண்ணீர் விடாதவர்கள் இருக்க முடியாது. அதுவே, இன்று வரையிலும் சோக கீதத்தின் உச்சமாக கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் வெளியான godfather படத்தின் தழுவலாக உருவான, நாயகன் திரைப்படம் 35 வருடங்கள் கழித்து இன்று வரையிலும், எந்த இயக்குநரும் பார்த்து வியக்கும் cult படமாக உள்ளது. இதற்கு அடுத்த ஆண்டே உருவான ‘அக்னி நட்சத்திரம்” திரைப்படமும், மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் உருவான முத்துக்களில் ஒன்று. அதில் வரும் ‘ராஜா.. ராஜாதி ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடல், இளையாராஜா தனக்கே போட்டுக்கொண்ட தற்புகழ்ச்சிபாடல் என்று விமர்சிக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலுக்காக மாநில விருதை பெற்றார் பாடகி சித்ரா. படத்தில் வித்தியாசமான லைட்டிங் கையாளப்பட்டதாக அந்த படத்தை பலரும் பாராட்டினர். தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து கீதாஞ்சலியை இயக்கியபோது இணைந்த கூட்டணி, மீண்டும் தமிழில் ’அஞ்சலி’ படத்தின் மூலம் கைகோர்த்தது. பெரியவர்களை புறந்தள்ளிவிட்டு, முழுக்க முழுக்க குழந்தைகளையும், அவர்களின் உணர்வுகளையுமே முன்னிறுத்தி மணிரத்னம் இயக்கிய படமே அஞ்சலி. ரகுவரன், ரேவதி என முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க, ஷாம்லி, அஞ்சலி குழந்தையாக நடித்தனர்.


இளையராஜா இசையில் உருவான ’அஞ்சலி அஞ்சலி’ என்ற பாடல் பலரும் தங்களது குழந்தைகளுக்காக பாடும் பாடலாக உள்ளது. படத்தின் இறுதிக் காட்சியில் அனைவரது நடிப்பும், இளையராஜாவின் இசையும், பார்பவர்களை மனமுருக வைக்காமல் இருக்காது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே படம் வெளியாகி, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்தது. இதன் பிறகுதான், தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றான தளபதி படம் உருவானது.

ரஜினி, மம்முட்டி என இரண்டு சூப்பர் ஸ்டார்களை வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழியிலும் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கட்டிப் போட்டது. இந்த பிரம்மாண்ட படத்திற்கான மொத்த பாடல் பதிவையும், அரை நாளிலேயே முடித்து அசத்தினார் ராஜா.


ராக்கம்மா கையத்தட்டு பாடல், இன்று வரையிலும் பலரது playlist-ல் இடம்பெறும் repeat பாடலாக இருக்கிறது. 2002ல் பிபிசி வெளியிட்ட உலகளவில் மிகப்பிரபலமான 10 பாடல்கள் பட்டியலில், ‘ராக்கம்மா கைய தட்டு” நான்காம் இடத்தைப் பிடித்து, தமிழ்சினிமாவை உலகறியச் செய்தது.

திரை ரசிகர்களை காட்சி மொழியால் கவர்ந்த மனிரத்னமும், இசைமொழியால் மயக்கிய ராஜாவும், ஏனோ அடுத்தடுத்து வந்த நாட்களில் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது. 30 வருடங்களை கடந்தும் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருப்பது, சினிமா ரசிகர்களின் ஏக்கத்தில் ஒன்றாகவே உள்ளது. ஒருவேளை அதற்கான வாய்ப்பு கனிந்தால், pan – india படமாக மட்டுமல்ல, pan – world படமாக கூட அந்தப் படமும் இசையும் பேசப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.