மதுரை மாவட்டத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஜூலை 17ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வீடுகளில் ஏராளமான கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் துன்புறுத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து செல்லூர் பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் கிளி வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள வனத்துறை, அவ்வாறு வளர்க்கப்படும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதனை மீறி கிளிகள் வீடுகளில் வளர்த்தால் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






